உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இராக்கெட்டுகள்


1. அதிசயச் செய்திகள்


ன்று ஞாயிற்றுக்கிழமை. குமணனும் அவனுடைய தங்கை குமுதமும் மாலையில் நடைபெறும் படக் காட்சிக்குச் சென்று வந்தனர். அன்று படக்காட்சிக்கு முன்னதாக அவர்கள் ‘செய்திச் சுருளில்’ பல அதிசயச் செய்திகளைக் கண்டு களித்தனர். வான்வெளிப் பயணத்தில் அமெரிக்கர்கள் ஒரு மனிதனை அனுப்பிய நிகழ்ச்சிகள் செய்திச் சுருளில் காட்டப்பெற்றன. படம் முடிந்து வீடு திரும்பும் பொழுது இருவரும் வான்வெளிப் பயணம்பற்றிய உணர்ச்சியுடன் இருந்தனர்.

குமுதம் ஒரு செல்லச் சிறுமி. பள்ளியில் படித்து வருகின்றாள். குமணன் உயர்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றான். ஒரு வாரமாக ஏதோ அலுவலாக வெளியூர் சென்று திரும்பிய அவர்களின் தந்தை தம் செல்வச் ‘சிட்டுக்கள்’ படக்காட்சிக்குச் சென்றதை அறிந்தார். ஒரு வாரமாகக் குழந்தைகளைப் பாராத அவர் முகம் வழிமேல் விழியை வைத்துக் காத்துக் கொண்டிருந்தது. குமணனும் குமுதமும் வீடு திரும்பினர்.