பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/35

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

இராக்கெட்டுகள்

இராக்கெட்டுகள் தாமாகவே வாயுக்களை உண்டாக்கிக் கொள்ளுகின்றன; இந்த வாயுக்கள் இராக்கெட்டின் உட்புறத்தில் உண்டாக்கப்பெறுகின்றன. இராக்கெட்டின் உட்புறத்தில் என்னென்ன பொருள்கள் தேவையோ அவற்றையெல்லாம் இராக்கெட்டுகள் சுமந்து செல்லுகின்றன. அஃதாவது, அதற்கு வேண்டிய எரிபொருள்கள், ஆக்ஸிஜன் முதலியவை யாவும் அவற்றினுள்ளேயே வைக்கப் பெறுகின்றன. இக் காரணத்தாலேயே அவை எங்கு வேண்டுமானாலும் செல்லமுடிகின்றது. காற்றே இல்லாத வான் வெளியிலும் அது பிரயாணம் செய்ய முடிகின்றது.

இராக்கெட்டு இயங்குவதுபற்றி மேலும் தெளிவு பெற வேண்டுமாயின் நீங்களே இச் சோதனையைச் செய்து பார்க்கலாம். படத்தில் காட்டப்பெற்றுள்ளவாறு ஊதி உப்பச் செய்யப்பெற்ற ஒரு பலூனை அமைத்திடுக. நீட்டப்பெற்ற கம்பியில் காகித இடுக்கிகளின் துணையால் உப்பச் செய்யப்பெற்ற பலூன் தொங்கவிடப்பெற்றுள்ளது. பலூனின் குவிந்து செல்லும் கோடிவழியாகக் காற்று வெளியேறச் செய்யப்பெறுகின்றது. இப்பொழுது காற்று வெளியேறும் எதிர்த்திசையில் பலூன் நகர்வதைக் காணலாம்.

இராக்கெட்டின் உந்துவிசை (Thrust) படத்தில் காட்டப்பெற்றுள்ள பொம்மைப் பலூனின் இயக்கத்தைப் போன்றதே. பலூனின் உட்புறத்தில் அழுத்தி நெருக்கப் பெற்றுள்ள காற்று அதன் கழுத்தின் வழியாக வெளியேறுகின்றது. சமனில்லாத உள்ளமுக்கம் வெளியேறும் காற்றிற்கு எதிர்த்திசையில் பலூனைச் செலுத்துகின்றது. இங்ஙனமே, இராக்கெட்டிலும் ஆக்ஸிஜனின் எரியும் எரி பொருள்களினின்றும் உண்டாகும் சூடான வாயுக்கள் எரியும் அறையின் (Combustion chamber) சுவர்களை