பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. இராக்கெட்டின் அமைப்பு

ராக்கெட்டுகள் மேலே கிளம்பிச் செல்லும்பொழுது அவை மிக விரைவாகக் காற்றினூடே செல்லுகின்றன. இதனால் ஒரு வன்மையான காற்று உண்டாகின்றது; இக் காற்று இராக்கெட்டின் வேகத்தைக் குறைக்கின்றது. ஆகவே, இராக்கெட்டு காற்றினை எளிதில் எதிர்த்துச் செல்ல வேண்டிய பொருத்தமான வடிவத்தில் அமைக்கப்பெறல் வேண்டியதாகின்றது.

இயற்கை உலகில் நாம் இத்தகைய வடிவங்களைக் காண்கின்றோம். நீரில் நீந்திச் செல்லும் மீன்கள், காற்றில் விரைவாகப் பறந்து செல்லும் பருந்துக்கள், தூக்கணாங் குருவிகள் இவற்றின் உடல்கள் முறையே நீரினாலும் காற்றினாலும் தடையேற்படாத வடிவத்தில் அமைந்துள்ளன. இவ்வாறு பொருளுக்குத் தண்ணீரினாலோ காற்றினாலோ தடை ஏற்படாதவாறு அமைத்தலை ஆங்கிலத்தில் “ஸ்ட்ரீம் லைனிங்” (Streamlining) என்று கூறுவர்.

அடுத்த பக்கத்தில் காட்டப்பெற்றுள்ள படங்களை உற்று நோக்கினால் இத் தடை என்ன என்பதையும் அஃது எவ்வாறு நீங்குகின்றது என்பதும் தெளிவாகும். எண் 1-ஆல் குறிப்பிடப்பெற்றுள்ள ஒரு பொருளின் தட்டையான பகுதியின் மீது காற்று தாக்கும் பொழுது அப்பொருள் எதிர்த்து நிற்கவேண்டிய தடை, எண் 3-ஆல் குறிப்பிடப்பெற்றுள்ள கூரிய வடிவிலுள்ள பொருள் எதிர்த்து நிற்கவேண்டிய தடையைவிட 20 மடங்கு அதிகமாக இருப்பதைக் காண்க. உருளை வடிவமாக அமைந்துள்ளதும் எண் 2-ஆல் குறிப்பிடப்பெற்றுள்ளதுமான பொருளின் தடை (இதன் குறுக்குவெட்டுத் தோற்றம் வட்டமாகக்