பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/42

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராக்கெட்டின் அமைப்பு

31

காண்போம். வாணவேடிக்கைகளில் பயன்படும் சீறு வாணத்தின் அமைப்பும் வான்வெளியில் அனுப்பப்பெறும் இராக்கெட்டின் அமைப்பும் கிட்டத்தட்ட ஒரே முறையில் அமைந்துள்ளன. எனவே, சீறுவாணத்தை (இராக்கெட்டை) முதலில் நோக்குவோம். இதில் இரண்டு வகை வெடிமருந்துக்கள் பயன்படுகின்றன. ஒன்று, உலர்ந்த எரி பொருளாகும். மற்றொன்று, ஆக்ஸிஜனைத் தரும் பொருளாகும். சீறுவாணத்தில் வெடிமருந்தின் வத்தி (Fuse) ஒன்று இணைக்கப்பெறுகின்றது. வத்தி எரிந்து கொண்டே சென்று நெருப்பு வெடிமருந்துக்களை அடைகின்றது. எரியும் வத்தியிலுள்ள வெப்பம் வெடி மருந்துக்களில் ஒன்றினின்றும் ஆக்ஸிஜனை வெளிவரச் செய்கின்றது. இப்பொழுது எரிபொருள் வேகமாக எரிகின்றது. சீறுவாணத்தின் பின் புறமாக வாயு பீறிட்டுக் கொண்டு வெளிவருகின்றது. இது சீறுவாணத்தை மிகப் பெருவிசையுடன் தள்ளுகின்றது. இங்ஙனம் தள்ளப்பெறும் விசை சீறுவாணத்தை வானத்திற்கு அனுப்புகின்றது.

இனி, இராக்கெட்டின் உட்புறத்தை நோக்குவோம். பெரும்பாலான வான்வெளி இராக்கெட்டுகளில் திரவ எரிபொருளும் திரவ நிலையிலுள்ள ஆக்ஸிஜனும் பயன்படுத்தப் பெறுகின்றன. இன்று இரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் புழங்கிவரும் இராக்கெட்டுகளில் (1) காஸோலின் (அல்லது மண்ணெண்ணெயும் திரவ நிலையிலுள்ள ஆக்ஸிஜனும்), (2) ஆல்க்கஹாலும் திரவ நிலையிலுள்ள ஆக்ஸிஜனும், (3) காஸோலினும் (Gasoline) நைட்ரிக் அமிலமும், (4) திரவ நிலையிலுள்ள ஹைட்ரஜனும் திரவ நிலையிலுள்ள ஃப்ளோரினும் (Fluorine) ஆகிய இவற்றுள் ஏதாவதொரு திரவ எரிபொருளின் கலவை பயன்படுத்தப்பெறுகின்றது.