பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பதிப்புரை

லக முன்னேற்றத்திற்கு அறிவியல் மிகமிக இன்றி யமையாதது. அது பல துறைகளாகப் பரந்து உள்ளது. அவற்றுள் மனிதன் விண்வெளியினை ஊடுருவித் திங்கள் மண்டிலத்தை நோக்கி விரைந்து செல்லும் முயற்சியும் ஒன்றாகும். இத்துறையில் மேலைநாடுகள் ஒன்றையொன்று போட்டியிட்டுக் கொண்டு முன்னேறிக்கொண்டு வருகின்றன. அறிவியலின் இத்தகைய விரைந்த போக்கினை ஆராயுங்கால் திங்கள் மண்டிலப் பயணம் விரைவில் கைகூடுவ தொன்றே எனத் தோன்றுகின்றது.

இம்முயற்சிக்கு அடிப்படையாயிருப்பது இராக்கெட்டுகள், இராக்கெட்டு எனினும் சீறுவாணம் எனினும் ஒக்கும். சீறுவாணமுறையை அடிப்படையாக வைத்துப் பெரிய அளவில் இயக்கப்படும் ஒரு கருவியே இராக்கெட்டு. இஃது எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது? இதன் கதை என்ன? இதனை இயக்குவது எங்கனம்? இதன் அமைப்பு என்ன? ஏவுகணைகள் என்றால் என்ன ? இன்ன பிற செய்திகளைச் சுருக்கமாகவும் விளக்கமாகவும் கூறுகின்றார் இந்நூலாசிரியர். அவருக்கு எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

இளைஞர் வானொலி, அதிசய மின்னணு ஆகிய இந் நூலாசிரியரின் நூல்களை வாங்கிக் கற்றுப் பயனடைந்தது போல் தமிழகம் இதனையும் ஏற்றுக் கற்றுப் பயனடையு மென நம்புகின்றோம்.

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.