பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

இராக்கெட்டுகள்


சிறுவனும் கல்லைத் தூக்கமுடியாமல் திண்டாடுகின்றான் பூமியின் ஈர்ப்பு ஆற்றல் தான் 'எடை' என்று வழங்கப் பெறுவதாக மேலே கூறினோம் அல்லவா? அதனை ஈண்டு நினைவு கூர்க.

நாம் ஒரு பந்தினை மேல் நோக்கி விட்டெறிகின்றோம். அது மீண்டும் பூமியை வந்தடைகின்றது. நாம் எவ்வளவுக் கெவ்வளவு சிரமப்பட்டுப் பந்தினை மேல் நோக்கி எறிகின்றோமோ அஃது அவ்வளவுக் கவ்வளவு மிகவும் உயரத்தில் செல்வதை அறிகின்றோம். புவியின் ஈர்ப்பு ஆற்றலை முற்றிலும் வெல்ல வேண்டுமானால், அஃதாவது அப்பந்து மீண்டும் பூமிக்குத் திரும்பாது மேலேயே போய்க் கொண்டிருக்கவேண்டுமானால், அதனை எவ்வளவு வேகமாகத் தூக்கியெறிய வேண்டும்? அதனை மணிக்கு 25,000 மைல் வேகம் செல்லுமாறு தூக்கி யெறிய வேண்டும்!

பேஸ் பந்தினைத் (Base ball) தூக்கியெறியும் கைதேர்ந்த நிபுணராலும் பந்தினை அவ்வளவு வேகமாகத் தூக்கி யெறிய முடியாது. அவர் மிக உச்ச வேகத்தில் பந்தினைத் தூக்கியெறிந்தாலும் அதன் வேகம் மணிக்கு 100 மைலுக்கு மேற் போகாது. மிக உயர்ந்த ஆற்றல் வாய்ந்த துப்பாக்கியும் குண்டினை மணிக்கு 1,800 மைலுக்கு மேல் சுடும் திறனை அடையவில்லை. ஆகவே, ஏதாவது ஒரு பொருளை அது புவியீர்ப்பு ஆற்றலினின்றும் விடுபடும் அளவுக்கு மிகவும் உயரமாகச் செல்லுமாறு தூக்கியெறிய வேண்டுமாயின் அஃது ஒரு பெரிய பிரச்சினையாக இருப்பதை நாம் நன்கு உணரலாம். இதனை எதிரேயுள்ள படம் விளக்குகின்றது. ஒரு பொருளை மணிக்கு 25,000 மைல் வேகத்தில் செல்லுமாறு அனுப்பக்கூடுமாயின், அது பூமியின் இழுப்பின் எல்லையைக் கடந்து விடும்; இந்த வேகம் "விடுபடும் நேர் வேகம்" (Escape velocity) என்று வழங்கப்பெறுகின்றது.