64
இராக்கெட்டுகள்
வேண்டும். காலநிலையின் காரணமாகவோ அல்லது நேரிட்ட பழுதின் காரணமாகவோ அது சிறிது வழி விலகினாலும் உடனே தானாகவே சரிப்படுத்திக்கொள்ளுமாறு செய்து விடலாம். எதிரியின் வானொலி அமைப்பும், இராடார் அமைப்பும் தன்னுடைய மின்னியல் அமைப்புக்களைத் தடுக்க முனைந்தால் அவற்றை எளிதில் புறக்கணிக்கவும் ஏற்பாடு செய்யலாம்.
இவற்றுடன், பல வழிகாட்டி அமைப்புக்கள் முடுக்கங்கள், அதிகவெப்பங்கள், அதிகக் குளிர்கள், விமானியைக் கொல்லக்கூடிய பிற நிலைமைகள் இவற்றை எதிர்த்து நிற்றலும் கூடும். திரும்பி வருவதற்கு வாய்ப்பே இல்லாத செய்தி அறியும் ஏற்பாடுகளிலும் (Missions) அவை அனுப்பப்பெறுவது தான் எல்லாவற்றிலும் முக்கியமானதாகும்.
இன்றுவரை பதினொரு வழிகாட்டி அமைப்புக்கள் நடைமுறையில் உள்ளன. ஒரு சில ஏவுகணைகள் அடுத்தடுத்துப் பறந்து செல்லும் நிலைகளில் இரண்டு வெவ்வேறு வழிகாட்டி அமைப்புக்களைப் பயன்படுத்துகின்றன. இவற்றைப் பற்றி ஈண்டு ஒரு சிறிது அறிந்து கொள்வோம்.
1. பின்தொடரும் காந்த வழிகாட்டி : இது தரையினின்றும் தரைக்கு ஏவப்பெறும் கணைகளிலுள்ள ஓர் எளிய அமைப்பு. இதற்கு நிலத்தில் தளவாட அமைப்புத் தேவை இல்லை. இஃது இரண்டாம் உலகப் பெரும்போரில் 1944-5 இல் இங்கிலாந்துமேல் ஏவப்பெற்ற சில 'வி-1 பறக்கும் குண்டுகளில்' பயன்படுத்தப்பெற்றது. ஏவப்பெறுவதற்கு முன்னர், ஏவுகணை ஒரு திட்டமான வழியில் இலக்கினை நோக்கி வைக்கப்பெறுகின்றது; தானாக இயங்கும் பொறியமைப்பினால் (Automatic pilot) அந்த வழியிலேயே இருக்குமாறு