பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

இராக்கெட்டுகள்


இல்லை. ஆனால், நிலத்தில் அந்த அமைப்பு மிக அதிகமாகத் தேவை. இதில் இரண்டு இராடாரின் அனுப்பும் கருவிகள் பங்கு பெறுகின்றன. அவற்றுள் ஒன்று இலக்கினைத் தேடியறிந்து அதன் வேகம், இருப்பிடம் இவற்றிற்கேற்ப அதனை விட்டு விலகாதிருக்கின்றது. மற்றொன்று ஏவுகணையின் இடம், வேகம் இவற்றிற்கேற்ப அதனை வழி நடத்தப் பயன்படுகின்றது. இந்த இரண்டு இராடார் அமைப்புக்களி னின்றும் கிடைக்கும் தகவல்கள் (data) கணக்கிடும் அமைப்பிற்கு அனுப்பப்பெறுகின்றன. கணக்கிடும் கருவி ஏவுகணை செல்ல வேண்டிய சரியான வழியினை மிக விரைவாகக் கணக்கிடுகின்றது. இதனால் ஏவுகணை இலக்கினைத் தடுத்து அழிக்க முடிகின்றது. மிகத்திறனுடன் செயற்படும் வழி காட்டி அமைப்புக்களில் இது சிறந்தது.

5. வானொலி நேவிகேஷன்' : இதில் இரண்டு அனுப்புங் கருவிகள் நிலத்தில் தெரிந்த இடங்களில் இருக்கவேண்டும். ஆனால், இஃது இராடார் வழிகாட்டி அடைப்பினை விட எளிய அமைப்பினைக் கொண்டது. ஏவுகணையினுள்ள ஓர் ஏற்குங்கருவி நிலத்தின் இரண்டு நிலையங்களினின்றும் ஒழுங்கான இடை வேளைகளில் அனுப்பப்பெறும் சைகைச் செய்திகளை ஏற்கின்றன. செய்திகள் ஏற்கப்பெறும் காலங்களின் வேற்றுமையை அளந்து அதிலிருந்து அனுப்பும் கருவிகளிலிருந்து அந்த ஏவுகணை எவ்வளவு தொலைவிலுள்ளது என்பதைக் கணக்கிடலாம். இந்தத் தகவலையும் அது வானத்தில் இருந்த காலத்தையும் சேர்த்து அதனுடைய சரியான இருப்பிடத்தைக் கண்டறியலாம். இஃது இலக்கின் சரியான வழியில் இராவிட்டால் அது தானாக இலக்கினை நோக்கிச் செல்லுமாறு திருப்பிவிடப்பெறுகின்றது.


2. Radio Navigation.