பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராக்கெட்டுகள்

கள் தம் கருத்துக்களைக் கதைவடிவில் கற்பனைக் கூற்றுகள் போல் எடுத்துரைக்க வேண்டியதாயிற்று. இருபதாவது நூற்றாண்டில் வாழ்ந்த எச். ஜி. வெல்ஸ் என்ற புகழ்பெற்ற அறிஞரும் "மதியை அடைந்த மாந்தர்கள்” (First men in the Moon) என்னும் புதினத்தில் பல கற்பனைக் கருத்துக்களை உருவாக்கியுள்ளார்.

இங்ஙனம் கற்பனையாக இருந்து வந்த எண்ணங்கள் இந்நூற்றாண்டின் தொடக்கத்தில் நடைமுறையில் செயற்பட்டன. பல அறிவியலறிஞர்கள், கனவாக இருந்து வந்த மதிமண்டலச் செலவினை நனவாக்க முயன்றனர். காடார்டு, ஒபெர்த் போன்ற அறிஞர்கள் இராக்கெட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டுப் பல அரிய உண்மைகளைக் கண்டறிந்தனர். நாளடைவில் இத்துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு வந்தன. இன்று இராக்கெட்டின் துணையால் மதியினையே தொட்டு விட்டனர்! ஐந்தாண்டுகட்கு முன்னரே (1959 இல்) இரஷ்யர்கள் இதில் வெற்றி கண்டனர். இந்த ஆண்டுதான் (ஆகஸ்டு - 1964) அமெரிக்கர்கட்கு இதில் வெற்றி கிட்டியது. இப்பொழுது மதிமண்டலத்திற்கு மனிதனே சென்று திரும்பிவர வேண்டுமென்ற முயற்சி நடைபெற்று வருகின்றது. இன்னும் ஆறாண்டுகளில் இதில் வெற்றிகிடைக்கும் என்ற நம்பிக்கை அறிஞர்களிடையே இருந்து வருகின்றது.

இந்த விண்வெளிச் செலவுக்கு உறுதுணையாக இருப்பது இராக்கெட்டு. இந்தப் பயணம் தொடங்கப்பெறுவதற்கு முன்னர் வானவெளியில் எடையின்மை அனுபவம், வானவெளியின் வெப்பம், அமுக்கம் இவைபோன்ற செய்திகள் இவற்றை அறிவதற்கு இராக்கெட்டு துணைசெய்கின்றது. இராக்கெட்டின் துணையால் தொலைக்காட்சி அமைப்பு, இராடார் அமைப்பு, தொலை ஒலிப்பான் அமைப்பு போன்ற அமைப்புக்களடங்கிய சிறிய துணைக் கோள்களை விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான மைல் உயரங்கட்கு அனுப்பிப் பல செய்திகளை அறிகின்றனர். அன்றியும், போர்த்துறையிலும் பல்வேறு செயல்களில் இராக்கெட்டு பயன்படுகின்றது. இங்ஙனம் பலதுறைகளிலும் சேவை புரியும் இராக்கெட்டினைப் பற்றி இந்நூல் ஒரளவு விளங்க உரைக்கின்றது. இந்த விளக்கத்திற்கு ஆங்காங்கு 41 படங்கள் துணைசெய்கின்றன. இந்நூலும் இந்தவரிசையில் வரும் என்னுடைய ஏனைய நூல்களும்