பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

ராணி மங்கம்மாள்

அருள் உவகையோடு தமுக்கம் அரண்மனைத் திரும்பினர். நேரம் நண்பகலாயிருந்தது. தமுக்கம் அரண்மனையின் முகப்புத் தோட்டம் அமைதியாயிருந்தது.

அவர்கள் பல்லக்கு தமுக்கம் அரண்மனையில் நுழைந்த போதே அரண்மனை முகப்பிலுள்ள புல்வெளியில் புதிய குதிரைகள் இரண்டு மூன்று நின்று கொண்டிருந்தன. யாரோ தேடி வந்திருக்கிறார்கள் என்று தெரிந்தது. வந்திருக்கும் புதியவர்கள் யாராயிருக்கக் கூடும் என்கிற யோசனையுடனே ராணி மங்கம்மாளும், ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனும் பல்லக்கிலிருந்து இறங்கினர்.

அவர்களுடைய சந்தேகத்தை அதிக நேரம் நீடிக்க விடாமல் அரண்மனைக் காவலாளி ஒருவன் வந்து தெரிவித்தான். அவன் எதிர்கொண்டு வந்து தெரிவித்த விதமே செய்தியின் அவசரத்தையும், அவசியத்தையும் உணர்த்துவதாயிருந்தது.

“திண்டுக்கல்லிலிருந்தும் அம்மையநாயக்கனூரிலிருந்தும் நம் படைத் தலைவர்களும், ஒற்றர்களும் அவசரமாகத் தங்களைக் காண வந்திருக்கிறார்கள் மகாராணீ!”

ராணி மங்கம்மாளோ, இளவரசனோ காவலாளிக்கு மறுமொழி எதுவும் கூறாமல், அவன் உரைத்த விவரத்தைக் கேட்டுக் கொண்டதை முகஜாடையால் ஏற்றுக்கொண்ட பின் உள்ளே விரைந்தனர். தெரிவதற்கிருந்த செய்தியில் அந்த இருவர் மனமுமே மிக விரைந்த நாட்டமும் பரபரப்பும் அடைந்திருந்தன. இளவரசன் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனை விட ராணி மங்கம்மாளின் மனம் தான் அதிகக் கலக்கமும் பரபரப்பும் அடைந்திருந்ததென்று சொல்லவேண்டும். மகாவீரனும், பேரழகனுமாகிய தன் கணவன் சொக்கநாத நாயக்கன் எந்தச் சூழ்நிலையில் காலமானான் என்பதை அவள் எண்ணினாள். நாட்டையும், தன்னையும், இளங்குருத்தான ரங்ககிருஷ்ணனையும் எந்த நிலையில் விட்டுச் சென்றார் என்பதையும் எண்ணினாள். நாட்டைச் சுற்றிலும் பகைவர்களும், ஆதிக்க வெறியர்களும், மதுரைச் சீமையைக் கைப்பற்றி ஆள இரகசிய ஆசை வைத்திருக்கும் அந்நியர்களுமாகச் சூழ்ந்திருக்கும்