பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

ராணி மங்கம்மாள்

நான் உயிர் வாழ வேண்டியிருக்கிறது. கணவனை இழந்த உன் துயரத்தைக் காட்டிலும் ஏற்கெனவே கணவனையும் இழந்து இன்று மகனையும் இழந்து தவிக்கும் என்துயரம் எவ்வளவு பெரியது என்று நினைத்துப் பார்."

"நியாயம்தான்! உங்களால் துயரத்தைத் தாங்க முடிகிறது. தாங்குகிறீர்கள். என்னால் முடியவில்லை. துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் பக்குவமும் எனக்கு இல்லை. எனக்கு நீங்கள் ஏதாவது உதவ முடியுமானால் அது இப்போது என்னைச் சாக விடுவதுதான்."

"சாவதும், வாழ்வதும் நம் கையில் மட்டும் இல்லையம்மா அளவற்ற துயரம் வரும்போது சாகவேண்டுமென்று நினைப்பதும், மகிழ்ச்சி வரும்போது வாழவேண்டும் என்று திட்டமிடுவதும் மனத்தின் ஆசாபாசங்களால் நிகழ்பவை உன் வயிற்றில் ஒரு சிசு வளர்கிறது. அது இந்த வம்சத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது. உன் கணவனுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமானால் இறப்பதுதான் ஒரே வழி என்று நீ நினைப்பது தவறு அம்மா! அவனுடைய கருவை வளர்த்துப் பெற்றெடுப்பதுதான் அவனுக்கு விசுவாசமான காரியம்...! உன்னைக் கொன்று கொள்ள வேண்டுமானால் உனக்கு உரிமையிருக்கலாம்! ஆனால் உன்னுள் வளரும் குழந்தையைக் கொல்லும் உரிமை உனக்கில்லை" என்று கண்டித்துக் கூறி அவளை நிர்ப்பந்தமாக ஓர் அறையில் அடைத்துச் சில பணிப் பெண்களையும் அவளோடு காவலுக்கு வைத்து விட்டுச் சென்றாள் ராணி மங்கம்மாள்.

மகன் ரங்ககிருஷ்ணனின் சடலத்துக்கான அந்திமக் கிரியைகள் நடந்தன. அதன்பின் சில நாட்கள் தொடர்ந்து அந்த அரண்மனையும் அதிலிருந்த மனிதர்களும் கலகலப்பற்றிருந்தார்கள். சின்ன முத்தம்மாளுக்கு ஆறுதல் தேறுதல் கூறி அவளைப் பாதுகாப்பதே ராணி மங்கம்மாளுக்குப் பெரிய பொறுப்பாக இருந்தது. அரசியல் பொறுப்புகள் எதையுமே அவள் கவனிக்க முடியவில்லை. இராயசம் கவனித்து வந்தார். அரண்மனையில் நடந்துவிட்ட துக்கச் சம்பவத்தின் காரணமாகக் கோயில்களில் தரிசனத்துக்குக் கூடச் செல்ல முடியாமல் இருந்தது. தங்களைத் தாங்களே சிறை வைத்துக்