பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

ராணி மங்கம்மாள்

பகுதிகளை எல்லாம் மீட்டு வெற்றி பெற்ற மகனின் பெருமை நினைவுக்கு வந்தது.

குறிப்பாக ரங்ககிருஷ்ணன் தலையெடுத்த பின்பே மதுரை வளநாட்டுப் பகுதிகள் ஒவ்வொன்றாக நாயக்க மரபினரின் ஆட்சிக் கட்டுப்பாட்டுக்குள் மீண்டும் வந்திருந்தன. வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்தது போல ரங்ககிருஷ்ணன் மாண்டு போயிருந்தான். அவன் உயிரோடிருந்து மீட்ட பகுதிகளை அவனுக்குத் தோற்ற ஒவ்வொரு சிற்றரசனும், இப்போது அவனில்லாத நிலைமையில் என்னென்ன நினைப்பான் என்று சிந்தித்தாள் ராணிமங்கம்மாள். நாயக்க மரபின் இந்த இழப்புகளும், சோகங்களும், பலவீனமான நிலைகளும் எதிரிகள் மனத்தில் என்னென்ன எண்ணங்களை ஏற்படுத்தும் என்று அநுமானம் செய்து பார்க்க முயன்றாள்.

மனிதர்களின் சாமர்த்தியங்கள் சில சந்தர்ப்பங்களில் நேர்கின்றன. வேறுசில சந்தர்ப்பங்களோ சாமர்த்தியங்களைத் தேடி அடையவைக்கின்றன. கடலில் இறங்காமல் நீந்த முடியாது; நீந்துவதற்குப் போதுமான ஆழமில்லாத தண்ணீரிலும் நீந்த முடியாது. மங்கம்மாளுக்கு அவள் இளமையிலிருந்தே நேர்ந்த ஒவ்வோர் அதிர்ச்சியும் சாமர்த்தியங்களில் ஒருபடி அவளை உயர்த்தக் கூடியதாகவே அமைந்திருக்கிறது. அவளுக்கு ஏற்பட்ட துயரங்களின் ஆழமே அவளை அவற்றில் நீந்திக் கரைகடக்க முடிந்தவளாகச் செய்திருக்கிறது. பலவீனமானவளாகவும், எந்த அதிர்ச்சியிலும் உடனே தளர்ந்து வீழந்துவிடக் கூடியவளாகவும் அவள் ஒருபோதும் இருந்ததில்லை. அவள் தந்தை இளமையில் பயமறியாதவளாக அவளை வளர்த்திருந்தது தான் காரணம்.

"உன்னை நான் சிறிதும் அடக்கவோ ஒடுக்கவோ கட்டுப்படுத்தவோ விரும்பவில்லை மகளே! நீ சுதந்திரமாகக் காட்டு மல்லிகைபோல் இஷ்டப்படி வளரலாம். சுதந்திரமாக வளர்பவர்கள் எதிர்காலத்தில் விரும்பத்தகுந்த நல்ல கட்டுப்பாடுள்ளவர்களாக மாறுவதும் கட்டுப்பாடாக வளர்பவர்கள் எதிர்காலத்தில் விரும்பத்தகாதபடி தாறுமாறாகத் திரிவதும் சகஜம். காடு மலைகளில்