பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

9

கவலைக்கிடமான காலத்தில் கணவனை இழந்து பால் மணம் மாறாத சிறுவன் ரங்ககிருஷ்ணனை இடுப்பில் ஏந்திச் சீராட்டி வளர்த்தது போலவே தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட நாட்டையும் மற்றொரு குழந்தையாக எண்ணிப் பாதுகாக்க வேண்டி நேர்ந்த தன் மனச் சுமையின் கனத்தை எண்ணினாள். அனுபவங்களாலும், அவசியத்தாலும், அவசரத்தாலும், சந்தர்பங்களின் நிர்ப்பந்தங்களாலும், தான் மெல்ல அரசியல் சிக்கல்களில் சிக்கியதையும், சிக்கல்களிலிருந்து தன்னையும் நாட்டையும், ஆட்சியையும் விடுவிக்கக் கற்றுக் கொண்டதையும் நினைத்தாள்.

“அறிவு ஒருவனை வெறும் விவரந் தெரிந்தவனாக மட்டுமே ஆக்குகிறது. அனுபவம்தான் உலகிலேயே மிகப்பெரிய ஆசிரியன். அனுபவம் தான் திறமையைக் கற்றுக் கொடுக்கிறது. அனுபவம் தான் மனத்தையும், வாக்கையும் புத்தியையும் பளிச்சென்று இலட்சணமாகத் தெரியும்படி மெருகிடுகிறது” என்று பாவாடை அணியும் சிறுமியாக சந்திரகிரியில் தன் தந்தை லிங்கம நாயக்கரோடு வாழ்ந்த போது அவர் தனக்குக் கூறிக்கொண்டிருந்த புத்திமதி இப்போது கணவனின் மரணத்துக்குப்பின் இப்படித் தன் வாழ்விலேயே பலித்து விடும் என்று மங்கம்மாள் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை.

சிறு பருவத்தில் தந்தையிடம் கேட்டுக் கேட்டு ரசித்த இராமாயணம், பாரதம், முதலிய வீரதீரக் கதைகள் நினைவு வந்தன. பயம் தயக்கம் என்பதெல்லாம் என்னவென்றே அறியாமல் சந்திரகிரிக் காடுகளிலும் மலைகளிலும் தோழிகளோடும் தனியேயும் சுற்றிய நாட்கள் ஞாபகத்தில் மேலெழுந்து மிதந்தன. அப்படி அடங்காப்பிடாரியாகச் சுற்றிய நாட்களில் ஒரு நாள் தன் வளர்ப்புத் தாதியரும் செவிலித்தாயும் தந்தையிடம் போய், தன்னைப் பற்றிக் குறை கூறிய போது "உன்னை நான் சிறிதும் அடக்கவோ, ஒடுக்கவோ, கட்டுப்படுத்தவோ விரும்பவில்லை மகளே! நீ சுதந்திரமாகக் காட்டு மல்லிகை போல இஷ்டப்படி வளரலாம். சுதந்திரமாக வளர்பவர்கள் எதிர்காலத்தில் விரும்பத்தகுந்த நல்ல கட்டுப்பாடுள்ளவர்களாக மாறுவதும், கட்டுப்பாடாக வளர்பவர்கள் எதிர்காலத்தில் விரும்பத்தகாதபடி தாறுமாறாகத் திரிவதும் சகஜம். காடு மலைகளில்