பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

111

சித்தப் பிரமை பிடித்தாற் போலிருந்த சின்னமுத்தம்மாளுக்கு எல்லா ஏற்பாடுகளும் கண்ணும் கருத்துமாகச் செய்யப்பட்டிருந்தன. பணிப்பெண்கள் தாய்மைப் பேற்றுக்குப் பின்வரும் முதல் நீராடலுக்காக அண்டா நிறையப் பன்னீரை நிரப்பி வைத்திருந்தார்கள்.

பெரு முயற்சிக்குப் பின் ராணி மங்கம்மாளே ஒருநாள் பிற்பகலில் தனியாகச் சின்ன முத்தம்மாளைச் சந்தித்தாள். அவளிடம் மனம் விட்டுப் பேசினாள்.

"நீ இப்படி இருப்பது எனக்கு மிகவும் கவலையளிக்கிறது சின்ன முத்தம்மா! உன் கவலைகளை நீ மறக்க வேண்டும். உன்னைத் தேற்றிக் கொண்டு உன் மகனைச் சீராட்டி வளர்க்க வேண்டும்."

இதற்கு மறுமொழி எதுவும் கூறாமல் கண்ணீர் சிந்தியபடியே மோட்டு வளைவை வெறித்து நோக்கியபடி இருந்தாள் சின்ன முத்தம்மாள். அவளிடம் எந்த விளைவும் ஏற்படவில்லை. ராணி மங்கம்மாள் நீண்ட நேரம் மன்றாடிய பின்னர் சின்ன முத்தம்மாள் மறுமொழி கூறினாள்.

"நாயக்க வம்சம் தழைக்க ஒரு வாரிசு தேவை என்றீர்கள் இதோ வாரிசு கிடைத்துவிட்டது. எடுத்துக் கொள்ளுங்கள் குலைபோட்டு ஈன்றபின் தாய் வாழைக்கு அப்புறம் இங்கு என்ன வேலை?"

-என்று கூறியபடியே தன் அருகில் கிடந்த குழந்தையை இருகைகளாலும் எடுத்து ராணி மங்கம்மாளிடம் நீட்டினாள். ராணி மங்கம்மாள் குழந்தையை மருமகள் கைகளிலிருந்து வாங்கத் தயங்கவில்லை. ஆனால் அதே சமயம் மருமகளின் பேச்சைக் கடிந்து கொண்டாள்.

"உனக்கு என்ன வந்து விட்டது இப்போது? ஏன் இப்படிப் பேசுகிறாய்? வாரிசு தேவை என்றால் அதை வளர்த்துப் பெரிதாக்கத் தாயும் தேவை என்பது நான் சொல்லித்தானா உனக்குத் தெரிய வேண்டும்?"

"நான் வாழவேண்டும் என்று நீங்கள் ஆசைப்படலாம். ஆனால் எனக்கு அந்த ஆசையில்லை! அவர் இல்லாத உலகம் எனக்கும்