பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

ராணி மங்கம்மாள்

மங்கம்மாள். எங்கே திரும்பினாலும் மகன் ரங்ககிருஷ்ணனின் ஞாபகமும், மருமகள் சின்னமுத்தம்மாளின் நினைவும் வந்து வேதனைப்படுத்தின. மகனையும், மருமகளையும் நினைத்து உருகாமல் அவள் அந்தப் பெரிய அரண்மனையில் ஒரு வினாடி கூட நிம்மதியாய் இருக்க முடியவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் மகன் ரங்ககிருஷ்ணனின் சிரிப்பொலி கேட்பதுபோல் பிரமையாயிருந்தது. அந்த அரண்மனை முழுவதும் மறைந்துபோன அவ்விருவரின் நினைவுகளே எங்கும் நிரம்பிக் கிடந்தன. அரசியல் அநுபவங்களும், ஆட்சிப் பொறுப்புகளும் ஓரளவு அவள் மனத்தைக் கல்லாக்கி யிருந்தன. இல்லாவிடில் அவளும் ஒரு பேதையைப் போல் இக்கொடுமைகளிலிருந்து விடுபடத் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும். பயந்து ஓடியிருக்கக்கூடும்.

புகழ் பெற்ற நாயக்க வம்சத்துக்கு ஒரு வாரிசை உருவாக்குகிறோம் என்ற நம்பிக்கையும் உள்ளார்ந்த திருப்தியுமே அவளை அப்படி எல்லாம் செய்யவிடாமல் அப்போது வாழ வைத்திருந்தன. நீறுபூத்த நெருப்பாக உள்ளே கனன்று கொண்டிருந்த துயரம் வெளியே தெரியவிடாமல் நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள் ராணி மங்கம்மாள். மக்கள் அவளை வீராங்கனை என்றும், எவ்வளவு துயரங்களையும் தாங்கிக் கொண்டு ஆட்சிக் கடமைகளை ஆற்றக்கூடிய திடசித்தமுள்ளவள் என்றும் வானளாவப் புகழ்ந்தனர்.

ஆனால் அவளது மனம் எவ்வளவுக்குக் கவலையில் சிக்கித் தவிக்கிறது என்பது இராயசம் போன்ற இரண்டோர் அரண்மனை முக்கியஸ்தர்களுக்குத் தெரிந்துதான் இருந்தது. அவர்களிடம் அவளால் அதை மறைக்க முடியவில்லை.

ஒரு நாள் மாலை அரண்மனை மந்திராலோசனை மண்டபத்தில் ராணிமங்கம்மாளுடன் பேசிக் கொண்டிருந்த போது இராயசம் ஒரு யோசனையைக் கூறினார்.

அவள் கையிலிருந்த பேரன் விஜயரங்க சொக்க நாதனை சுட்டிக்காட்டி, "இவனுடைய நலனுக்காவாவது இதை நீங்கள் செய்தாகவேண்டும்" என்றார் அவர். அவர் கூறிய அந்த யோசனை ராணி மங்கம்மாளைச் சிந்திக்க வைத்தது.