பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

ராணி மங்கம்மாள்

அலைகின்ற தண்ணீர் ஒரு நாள் ஓரிடத்தில் கரைகளுள்ள நதியாக மாறிப் பேரும் புகழும் பெற்றுக் கடலை அடையும் தகுதியைப் பெறும் என்பது தான் நியதி. உன் தாதியாரும் செவிலியும் உன்னைப் பற்றிக் கூறும் குறைகளை நான் இலட்சியம் செய்யப் போவதில்லை. கவலைப் படாமல் உன் விருப்பப்படி இரு குழந்தாய்!” என்று தன்னைக் கூப்பிட்டு அன்போடு அரவணைத்துப் பிரியத்தோடு அவர் கூறிய நல்லுரைகளை எண்ணினாள். மனம் அந்நினைவில் இளகி நெகிழ்ந்தது.

காடு மலைகளில் அலைகின்ற தண்ணீரெல்லாம் கீழே இறங்கியதும் ஓரிடத்தில் கரைகளுள்ள நதியாவது போல் தன் வாழ்வும் இப்போது ஆகியிருப்பதனை மங்கம்மாள் உணர்ந்தாள்.

“அம்மா!... என்ன யோசனை... இப்படி ஒரேயடியாக...? ஒற்றர்களும் படைவீரர்களும் இங்கே ஆலோசனை மண்டபத்து முகப்பில் காத்திருக்கிறார்கள். நீங்கள் பாட்டுக்கு ஏதோ யோசித்தபடியே அந்தப்புரத்தை நோக்கி நடக்கிறீர்களே?” என்று ரங்ககிருஷ்ணன் குறுக்கிட்ட பின்புதான் மங்கம்மாள் நிகழ்காலத்துக்கே வந்தாள்.

புகழ்பெற்ற திருமலை நாயக்கரின் பேரரும் தன் கணவருமான காலஞ்சென்ற சொக்கநாத நாயக்கரின் கம்பீரத் திருவுருவை மனக்கண்ணில் உருவகப்படுத்திப் பார்த்துவிட்டு அந்த நினைவு மாறுவதற்குள்ளே அதே ஞாபகத்தோடு அருகே உடன் வந்து கொண்டிருந்த மகன் ரங்ககிருஷ்ணமுத்து வீரப்பனையும் புறக்கண்களால் பார்த்து உள்ளூற ஒப்பிட்டுக் கொண்டாள் ராணி மங்கம்மாள்.

தஞ்சை மன்னர்களின் விரோதப் போக்கு, சேதுபதிகளின் மறவர் சீமை மனஸ்தாபங்கள், ரஸ்டம்கான் என்ற படைத் தளபதி தன் கணவரை ‘அரசரே இல்லை’ என்று கூறி அவமானப்படுத்த முயன்ற சம்பவம், கணவரின் சிரமங்கள், ஆட்சிக்கால வேதனைகள்... எல்லாம் ஞாபகம் வந்து அந்த ஞாபகத்தோடு மகனின் முகத்தை நம்பிக்கை பொங்கப் பார்த்தாள் அவள். அவன் சொன்னான் :