பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

ராணி மங்கம்மாள்

களையும் வரவேற்று உபசரிப்பதிலும் விருந்தோம்புவதிலும் ராணி மங்கமாளுக்கு நிகரில்லை உத்தமமான விசுவாசமுள்ள பெண்மணி" என்று வாய் ஓயாமல் தன்னை அவர்கள் புகழும்படி ஒரு சூழ்நிலையை உருவாக்கியிருந்தாள். இந்தச் சூழ்நிலை அவளையும் அவளுடைய ஆட்சியையும் கவசம்போல் பாதுகாக்கத் தொடங்கியிருந்தது.

இதைப்பற்றி உரையாடும்போது அவளே ஒரு நாள் இராயசத்திடம், "ஆண்களே சில சமயங்களில் மற்ற ஆண்களை முட்டாளாக்கிவிடலாம். ஆனால் என்னைப்போல் பெண்கள் எங்கள் முழுத் திறமையையும் சாதுரியத்தையும் பயன்படுத்தி முட்டாளாக்குவது என்று புறப்பட்டுவிட்டால் எங்களை யாரும் வெல்ல முடியாது" என்று சிரித்தபடியே சொல்லியிருந்தாள். அதைக் கேட்டு இராசயமும் பதிலுக்குச் சிரித்தார்.

"எப்படியோ ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்தாயிற்று டில்லி பாதுஷாவின் விரோதம் தீர்ந்தது. அக்கம் பக்கத்து அரசர்கள் விரோதிகள் ஆக முடியாதபடி அவர்களைத் தடுத்தும் ஆயிற்று" என்றார் இராயசம். அதற்கு மங்கம்மாள் பதிலுரைத்தாள்.

"குழந்தை விஜயரங்கன் பெரியவனாகி முழு ஆட்சிப் பொறுப்பையும் ஏற்கிறவரை இப்படியெல்லாம்தான் இந்த ஆட்சியையும் நாட்டையும் நான் காப்பாற்றியாகவேண்டும் வேறு வழியில்லை."

வெறுத்துத் தற்கொலை செய்து கொண்டு விடவேண்டிய அளவு துயரங்களை அடுத்தடுத்து அநுபவித்து வாழ்க்கையே கசந்துபோன பின்னும் பேரன் என்கிற வம்சத்தளிர் வளர்ந்து தழைக்கின்ற வரை எல்லாக் கசப்புகளையும் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்ற பொறுமை அவளுக்கு வந்திருந்தது.

இப்போது வாழ்வா சாவா என்பது அவளையும் அவளுடைய அருமைப் பேரனும் தாயில்லாக் குழந்தையுமான விஜயரங்க சொக்கநாதனையும் பொறுத்த கேள்வியாக மட்டும் இல்லை. ஓர் அரச வம்சம் மேலும் தொடர்ந்து வாழப்போகிறதா அல்லது இதோடு