பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

125

அழிந்து விடப்போகிறதா என்ற கேள்வியாகவே இருந்தது. அதனால்தான் அவள் இந்த விஷயத்தில் இத்தனை பொறுமைகளையும் பிடிவாதத்தையும் சாகஸங்களையும் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டியதாயிற்று. முற்ற முற்ற அடியிலேயும் உள்ளேயும் வைரம் பாயும் தேக்க மரத்தைப் போல, அரசியலிலும் வைரம் பாய்ந்த முயற்சியும் பிரச்சனைகளை தயங்காமல் எதிர் கொள்ளும் திறனும் அவளுள் இப்போது நன்றாக வளர்ந்திருந்தன.

அதிக சிரமமும் பிரயத்தனமும் இல்லாமல் ராஜதந்திர சலனங்களைச் சிக்கல்களையும் ஏற்படுத்தியே தன் எதிரிகளைச் சமாளித்தாள் அவள். டில்லி பாதுஷாவிடம் நம்பிக்கையையும் மதிப்பையும் சம்பாதித்து அதன் மூலம் அந்தப் பாதுஷாவுக்குக் கீழ்ப்படிந்து அடங்கிய மற்ற அரசர்கள் எல்லாரும் தன்னிடம் எந்த வம்புக்கும் வராமல் மரியாதைக்குரிய எல்லைகளில் அவர்கள் ஒதுங்கி விலகியே நிற்கும்படி அவள் கவனித்துக் கொண்டாள்.

"இப்படி அரண்மனை அந்தப்புரத்திலிருந்து அதிகம் வெளியேறாமலே பெரிய பெரிய அரசியல் சாதனைகளை எல்லாம் அவள் நிறைவேற்றிக் கொள்ள முடிந்ததென்றால் அதற்கெல்லாம் காரணமான சாகஸத்திலும் சாதுரியத்திலும் அவள் தேர்ந்திருந்தது தான் காரணம.

அரண்மனையில் பேரனை வளர்த்தபடியே வெளியில் தன் ஆட்சியையும் அதன் எல்லைகளையும் கூட வளர்த்துப் பெருக்க முடிந்தது அவளால், தென்னாட்டின் ஒரே பெண்ணரசி என்ற முறையில் அவள் டில்லி பாதுஷாவின் இரக்கத்தையும் கருணையையும் சலுகைகளையும் அடைந்திருந்தாள். அதே சமயத்தில் தான் யார் மேலும் ஏமாளித்தனமான கருணையையும் தகுதியில்லாத இரக்கத்தையும் காட்டிவிடாமல் திடமாக இருந்தாள். ஒளரங்கசீப்பின் அரசியல் பிரதிநிதிகளாகவோ, படைத்தலைவர்களாகவோ யார் தெற்கே புறப்பட்டு வந்தாலும் அவர்களைத் தன்மேல் அதிகமான மரியாதை உள்ளவர்களாலும் தான் சொன்னபடி கேட்கக் கூடியவர்களாகவும் மாற்ற முடிந்த வித்தை அவளுக்குத் தெரிந்திருந்தது. பாதுஷாவின் பிரதிநிதிகளும் படைத்தலைவர்களும் அவளிடம்