பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

11

“ஏதோ கஷ்டம் வரப்போகிறது என்று இப்போது மனசில் படுகிறது அம்மா!”

மகனின் குரலிலே கவலை தோய்ந்திருப்பது தெரிந்திருந்தது.

“கவலைப்ப்டாதே! ஒவ்வொரு கஷ்டமும் நம்மை வளர்ப்பதற்குத்தான் வரும்! சுகங்கள் நம்மை ஒரேயடியாக அயர்ந்து தூங்கச் செய்துவிடாதபடி அடிக்கடி நம்மை விழிப்பூட்டுவதற்கு வருபவை எவையோ அவற்றிற்குத்தான் ஜனங்களின் பாமர மொழியில் கஷ்டங்கள் என்று பெயர் அப்பா!”

“கள்ளழகர் கருணையாலும் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் திருவருளாலும் உங்கள் அரிய ஆலோசனையின் உதவியாலும் எந்தக் கஷ்டத்தையும் வென்று விடலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது அம்மா!”

“மகனே! நம்பிக்கை தான் அரசியலில் தவம்! நம்பிக்கை தான் வெற்றி! நம்பிக்கை இருந்தால் எதையும் வெல்லலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் எல்லோரும் ஒன்றைத் தொடங்கு முன்னேயே தோற்றுப் போகிறார்கள். நம்பிக்கை உள்ளவர்களோ தோற்றுப்போன பின்னும் வெற்றி கொள்ளத் தொடங்குகிறார்கள். இந்த தாரக மந்திரம் உன் இதயத்தில் இடைவிடாமல் ஞாபகம் இருக்க வேண்டும். இந்த ஒரே மந்திரத்தால் தானே பெண் பிள்ளையாகிய நானே இத்தனை காலம் இத்தனை துன்பங்களுக்கும் விரோதங்களுக்கும் நடுவே இந்த நாட்டையும் உன்னையும் பாதுகாத்து வளர்க்க முடிந்தது?”

இவ்வாறு கூறியபடியே மகனுடன் தமுக்கம் அரண்மனைக்குள்ளே இருந்த விசாலமான ஆலோசனை மண்டபத்திற்குள் நுழைந்தாள் ராணி மங்கம்மாள்.

அங்கே காத்திருந்த படைத் தலைவர்களும் ஒற்றர் தலைவர்களும் முன் வந்து ஏழடி விலகி நின்று பயபக்தியோடு ராணி மங்கம்மாளையும், இளவரசரையும் வணங்கினார்கள். மங்கம்மாள் தான் முதலில் அவர்களை வினவினாள்: