பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

ராணி மங்கம்மாள்

செத்துப் போவதையும் பற்றி ஏன் பேசுகிறாய்? இதெல்லாம் உனக்கு எப்போது தெரியப்போகிறது? நீ பேசக் கற்றுக்கொள்ள வேண்டும் அப்பா இப்படியெல்லாம் பேசக்கூடாது."

"அப்படியில்லை பாட்டி நாம் வாழவேண்டுமானால் நமக்கு இடையூறாக இருக்கும் எல்லாவற்றையும் கொன்று தொலைத்தாக வேண்டும்."

"தங்களுக்குச் சொந்தமான தண்ணீரில் சுதந்திரமாகத் துள்ளித் திரியும் இந்த மீன்கள் உனக்கு என்னப்பா இடையூறு செய்கின்றன?"

"இவை துள்ளிக் குதிப்பதால் என் மேல் தண்ணீர் தெறித்து என் பட்டுப் பீதாம்பரங்கள் நனைகின்றன. எனக்குக் கோப மூட்டுகின்றன..."

"போதும் பைத்தியக்காரனைப் போலப் பேசாதே இந்த மீன்கள் உனக்கு இடையூறாயிருக்கின்றன என்றால் கேட்பவர்கள் கைகொட்டிச் சிரிப்பார்கள்!"

"அப்படிச் சிரிப்பவர்களை உடனே சிரசாக்கினை செய்து கொள்வேன்..."

"கொல்லுவதையும் அழிப்பதையும் தவிர வேறு எதையாவது பேசு."

படகு மைய மண்டபக் கரையில் போய் நிற்கிறது. கிளி கொஞ்சும் மைய மண்டபத் தோட்டத்திற்குள்ளே படியேறிப் போகிறார்கள் அவர்கள், வானில் பிறைச்சந்திரன் பவனி வருகிறான். பொழுது சாய்கிறது.

"பாட்டி இந்த மைய மண்டபக் கோபுரத்தில் உச்சி வரை எறிப் பார்க்கவேண்டும். ஆசையாயிருக்கிறது"

"இந்த இருட்டுகிற நேரத்தில் கோபுரத்தில் ஏறித்தான் ஆகவேண்டுமா?"

"நான் சொன்னால் சொன்னதுதான். கட்டாயம் ஏறிப்பார்த்தே ஆகவேண்டும்."