பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

135

அவன் முகத்திலிருந்த குரூரத்தையும் கொலை வெறியையும் பார்த்துத் திடுக்கிட்ட ராணி மங்கம்மாள் பதறிப் போனாள். அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா அல்லது திடீரென்று ஏதேனும் பேய், பிசாசு பிடித்து ஆட்டுகிறதா என்று அவளுக்குப் பயமாகப் போய்விட்டது. அவள் பரிதாபமாகக் கேட்டாள்:

“ஏண்டா இந்தக் கெட்டபுத்தி? உன்னை வளர்த்து ஆளாக்கிய பாவத்திற்கு இதுவா நீ எனக்குத் தருகிற பரிசு?"

"உன்னிடமிருந்து எனக்கு விடுதலை வேண்டும் பாட்டி! உனக்கும் வயதாகிவிட்டது."

"துரோகி நிஜமாகவே என்னைக் கீழே பிடித்துத் தள்ளுகிறாயே பாவி! நான் உனக்கு என்னடா கெடுதல் செய்தேன்? வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் இப்படி..?"

அவள் அலறிக் கத்தினாள். விஜயரங்கன் அந்த உயரமான கோபுரத்திலிருந்து அவளைக் கீழே தள்ளியே விட்டான்.

அவள் வீறிட்டுக் கூக்குரல் எழுப்பியபடி தலைகுப்புற விழுந்து விட்டாள்.

கண்ட கனவை அலர்மேலம்மாவிடம் கூடச் சொல்வதற்குத் துணிவு வரவில்லை அவளுக்கு. கட்டிலில் இருந்து புரண்டு விழுந்ததில் உடம்பு வேறு வலித்தது. தூக்கக் கிறக்கத்தில் கட்டிலிலிருந்து புரண்டு விழுகிற அளவு அவள் ஒரு நாளும் அவ்வளவு அயர்ந்து உறங்கினதே இல்லை. இன்று அந்த அளவு அயர்ந்து விட்டோம் என்ற நினைப்பே கூட அவளுக்கு நாணத்தை அளித்தது.

விடிவதற்கு இன்னும் சில நாழிகைகளே இருந்தன. அவளுக்கு உறக்கம் கலைந்து விட்டது. மறுபடியும் உறங்கினால் எங்கே கெட்ட கனவு தொடருமோ என்ற அச்சமும் தயக்கமும் வேறு தடுத்தன.

ராணியே உறங்காமலிருந்ததால் அலர்மேலம்மாளும் அவள் காலடியில் குத்த வைத்து உட்கார்ந்து கொண்டாள். அதிகாலையில் கண்ட கனவு பலிக்குமா, இல்லையா என்பதைப்பற்றி ராணியும் அவளும் அப்போது பேசிக்கொண்டார்கள்.