பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

ராணி மங்கம்மாள்

சிறுவயதிலிருந்தே ராணி மங்கமாளுடன் தோழியாகவும், பணிப்பெண்ணாகவும் இருந்து வரும் அநுபவத்திலும் உரிமையிலும் கனவுகளின் இயல்பையும், அவை பலிக்கும் விதத்தையும் விளக்கிக் கொண்டிருந்தாள் அலர்மேலம்மா, தன் வாழ்க்கை அநுபவத்திலும், கேள்வி ஞானத்திலும் அதிகாலையில் கண்ட கனவு பலித்திருக்கும் சந்தர்ப்பங்களை ஒவ்வொன்றாக அப்போது மங்கமாளுக்கு விவரித்தாள் அலர்மேலம்மா.

வேண்டுமென்றே ஒரு பிடிவாதத்துக்காகவும், வம்புக்காகவும், தன் வாழ்வில் அதிகாலையில் கண்ட கனவு ஒன்று கூடப் பலிக்க வில்லை என்பது போல அவளிடம் வாதாடிக் கொண்டிருந்தாள் ராணி மங்கம்மாள். அதிகாலையில் கண்ட கனவு எந்த அளவு நிச்சியமாகப் பலிக்கும் என்று உறுதியாக அறியவே இந்த எதிர்பாராத வாதத்தை அவள் மேற்கொண்டிருந்தாள்.

மூத்தவளும், அனுபவசாலியும், லெளகிக ஞானம் மிக்கவளும் ஆகிய அலர்மேலம்மாவிடம் தான் கண்ட கனவைப் பற்றி மட்டும் மூச்சுவிடாமல் மற்றெல்லாவற்றையும் பேசிக்கொண்டிருந்தாள் ராணி.

மனத்தில் பயமும் தற்காப்பு உணர்ச்சியும் மூளவே ராணி மங்கம்மாள் அவசர அவசரமாக நீராடி உடை மாற்றிக் கொண்டு திருவாலவாயுடையார் திருக்கோயிலுக்குச் செல்ல எண்ணினாள். பணிப்பெண் அலர்மேலம்மாளும் அந்த யோசனையை, வரவேற்றாள். அலர்மேலம்மாளும் அவசர அவசரமாக நீராடி உடைமாற்றி நெற்றியில் சிவப்புக் கீற்றாக ஶ்ரீசுவர்ணக் கோடு இழுத்துக் கொண்டு ராணியோடு புறப்பட்டாள்.

"போகிறதுதான் போகிறோம்... கூடலழகர் கோயிலுக்கும் போய்த் தரிசித்துவிட்டு வந்துவிடலாம் அம்மா" என்றாள். அலர்மேலம்மா.

"வெறும் சிவன்கோயிலுக்கு மட்டும் போவானேன்? பெருமாள் கோயிலுக்கும் சேர்த்தே போய்விட்டு வந்துவிடலாம் என்கிறாயா?"

"அதற்கில்லையம்மா சிவன் அழிக்கிற கடவுள், நமக்கு வருகிற தீமைகளை எல்லாம் அவர் அழிக்கட்டும். பெருமாள் காக்கிற கடவுள்.