பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

137

நம்முடைய நன்மைகளை எல்லாம் அவர் காக்கட்டும். இரண்டு பேரையும் தரிசிப்பதுதான் நல்லதம்மா" என்று சிரித்தபடியே சொன்னாள் அலர்மேலம்மா.

இருள் பிரிவதற்குள் அத்தனை வைகறையிலேயே ராணி பல்லக்கில் கோயிலுக்குப் புறப்பட்டபோது அரண்மனை வட்டாரத்தில் ஆச்சரியத்தை உண்டாக்கியது அந்த நிகழ்ச்சி.

அவர்கள் கோயிலுக்குப் புறப்படும்போதுகூட, குழந்தை விஜயரங்கன் அயர்ந்து தூங்கிக் கொண்டுதான் இருந்தான். குழந்தையைக் கவனித்துக் கொள்ள வேறொரு பணிப்பெண்ணை ஏற்பாடு செய்துவிட்டு அவர்கள் புறப்பட்டிருந்தார்கள். குழந்தை விஜயரங்கனுக்கு முறைப்படி முடிசூட்டிய பின்னர் இப்படி ஒரு சொப்பனம் நேர்ந்ததே என்பது தான் அவள் கலக்கத்துக்குக் காரணமாயிருந்தது. அவனுக்கு முடிசூடியதற்கும் இந்தக் கெட்ட சொப்பணத்திற்கும் சம்பந்தம் இருக்குமோ என்று தன் மனம் நினைப்பதை அவளால் தடுக்க முடியவில்லை.

கோயில்களில் அர்ச்சனைகள், வழிபாடுகளை முடித்துக் கொண்டு அரண்மனை திரும்பிய பின்னும் நீண்டநேரம் விடிவதற்கு முன் கண்ட சொப்பனமே மனத்தின் எல்லை நிறைய ஆக்ரமித்துக் கொண்டு அவளை அலைக்கழித்தது. அதுபற்றிய எண்ணங்களே மனத்தில் கிளைத்தன.

தனது அரண்மனை அலுவலர்களிடமோ மந்திரி பிரதானிகள், இராயசம் போன்றவர்களிடமோ இந்தக் கனவைப் பற்றிப் பேசவில்லை அவள். பலரிடம் மனம்விட்டுப் பேச இயலாமலும், முடியாமலும் இருந்ததாலேயே இந்தக் கனவு அவளை உள்ளூர அதிகம் அலைக்கழித்தது; அதிகம் பாதித்தது.

கனவுகள், சோதிடம், சகுன சாஸ்திரம் சம்பந்தமான பண்டிதர்களை வரவழைத்து அவர்களிடம் தன் கனவு இது என்று நேரடியாகச் சொல்லாமல் அதிகாலையில் ஒருவர் கிணற்றில் பிடித்துத் தள்ளுவது போலவும் இன்னொருவர் விழுவது போலவும் கனவு கண்டால் என்ன பலன் நேரக்கூடும் என்பதை மட்டும் சூசகமாக விசாரித்தாள்.