பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

ராணி மங்கம்மாள்

அனுபவிப்பதற்கும் எப்போதுமே அதிக ஆர்வம் காட்டும் ராணி ஏன் இம்முறை நிம்மதியற்றுப் போய் அங்கு நேரத்தைக் கழித்தாள் என்பதையும் யாராலும் விளங்கிக் கொள்ள முடியவில்லை. எல்லாரும் அரண்மனைக்குத் திரும்பிய பின்னரும்கூட அந்த நிலையே நீடித்தது. திடீரென்று ராணியின் மனத்தில் என்ன நேர்ந்து விட்டது என்பது யாருக்குமே புரியாத புதிராக இருந்தது. தெப்பக்குளத்திலிருந்து திரும்பிய பின் இராப்போஜனத்திற்காக அவள் செல்வதற்கு முன் முற்றிலும் எதிர்பாராத விதமாக இராயசமும் பிற பிரதானிகளும் அவசர அவசரமாக ராணி மங்கம்மாளைச் சந்திக்க வந்தனர். காரியம் ஏதோ மிகமிக அவசரமானதாகவும் முக்கியமானதாகவும் இருக்க வேண்டுமென்று தோன்றியது அவளுக்கு.

சில நாட்களுக்குமுன் ஓரிரவு வைகறை வேளையில் கண்ட கெட்ட சொப்பனத்தின் விளைவாக ஏதேனும் கெடுதல் புதிதாக வந்திருக்குமோ என்ற தயக்கத்துடனேயே அவள் அவர்களை எதிர்கொண்டாள். இராயசத்தைக் கேட்டாள்.

"விளக்கு வைக்கிற நேரத்துக்குத் தேடி வந்திருக்கிறீர்கள்! காரியம் மிகமிக அவசரமானதாகவும், முக்கியமானதாகவும் இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது."

"உங்கள் அநுமானம் ஒரு சிறிதும் தவறில்லை மகாராணி"

"காரியம் என்னவென்று இன்னும் நீங்கள் வாய்விட்டுச் சொல்லவில்லையே?"

"சொல்லத்தானே வந்திருக்கிறோம் மகாராணி நாடு பிடிக்கும் பேராசையால் மைசூர் மன்னன் சிக்க தேவராயன் மோசம் செய்து விட்டான்."

"என்ன நடந்துவிட்டது?"

வந்தவர்கள் பதில் சொல்வதற்கு ஓரிரு கணங்கள் தயங்கினாற் போலப் பட்டது. அதற்குள் ராணி மங்கம்மாளின் மனத்தில் இருந்த குழப்பம் அதிகமாகி வளர்ந்தது.