பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

143

ஆயின. அதுவரை கவலையோடு இருந்த ராணி மங்கம்மாள் இது தெரிந்ததும் நிம்மதியடைந்தாள்.

திரிசிரபுரத்திற்கு அனுப்பிய பெரும்படையை வீணாக்காமல் எந்தப் படையெடுப்பிற்காவது பயன்படுத்தியாக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. மைசூர்ப் படைத்தலைவன் குமரய்யாவும், அவனது வீரர்களும் இப்படித் திடீரென்று திரும்பி ஓடுவார்கள் என்று எதிர்பார்க்காததால் பெரும் படையைப் பல திசைகளிலிருந்தும் திரட்டியிருந்த ராணி மங்கம்மாளின் தளபதிகள் அந்தப் படை வீரர்களின் உத்வேகத்தை அப்படியே முடக்கிவிடாமல் உடனே எதற்காவது உபயோகப்படுத்தியாக வேண்டும் என்பது உணரப் பட்டதைத் தெரிவித்தார்கள்.

படைகள் திரிசிரபுரத்திலிருந்து திரும்பிகொண்டிருந்த போதே இங்கே தமுக்கம் ராஜ மாளிகையில் ஆலோசனை நிகழ்ந்தது.

"அவசரமாக நாலுகால் பாய்ச்சலில் ஓடப் புறப்பட்ட குதிரையைத் தடுத்து நிறுத்தியது போல் ஆகிவிட்டது மகாராணீ குமரய்யாவின் முற்றுகையைத் தகர்க்க வேண்டுமென்று திரிசிரபுரத்துக்குத் திரட்டி அனுப்பிய படைகள் குமரய்யா மைசூருக்கு ஓட்டமெடுத்து விட்டதால் ஏமாற்றத்தோடு திரும்பி வருகின்றன. திரும்பி வருகிற படைகளுக்கு வேலை கொடுத்தாக வேண்டும்" என்றார் இராசயம்.

ராணிமங்கம்மாள் யோசித்தாள். இராயசமும் பிரதானிகளும் ராணி என்ன சொல்லப் போகிறாளோ என்று காத்திருந்தனர். ராணி மங்கம்மாள் பேச ஆரம்பித்தாள்.

"மராத்தியர்கள் மைசூரைத் தாக்கத் தொடங்கியது நல்லதாயிற்று. மைசூருக்கு ஆபத்து வந்திருக்கவில்லையானால் குமரய்யா படைகளோடு திருச்சி முற்றுகையை விட்டுவிட்டு ஓடியிருக்கமாட்டான். குமரய்யா ஓடியதால் இப்போது இந்தப் படைகளுக்கு வேறு ஒரு பொன்னான வாய்ப்புக் கிடைக்கப் போகிறது."

"அது என்ன வாய்ப்பு, என்பதை மகாராணியார் சொல்லியருள வேண்டும்."