நா. பார்த்தசாரதி
145
கொண்டே இருந்தது. சோதிடர்களையும் பெரியவர்களையும் கூப்பிட்டுக் கனவை அதிகமாக விவரிக்காமல் பரிகாரம் செய்ய மட்டும் வழிகளைக் கேட்டறிந்தாள். பரிகாரங்களைச் செய்தாள் மங்கம்மாள்.
சில மாதங்களில் தெற்கே சென்ற படை பெருந்திறைப் பொருளுடனும், வெற்றியுடனும் திரும்பியது. "மகாராணி இம்முறை ரவிவர்மனுக்கும், அவனுடைய அமைச்சர் முறையினரான எட்டு வீட்டுப் பிள்ளைமார்களுக்கும் ஒற்றுமை இல்லை. அதனால் நமது வெற்றி மிகவும் எளிதாகிவிட்டது. எட்டு வீட்டுப் பிள்ளைமார்களின் விரோதம் நீடிக்கிறவரை நம் திறைப்பணம் ஒழுங்காகக் கிடைக்கும். எட்டு வீட்டுப் பிள்ளைமார்களை அழித்து ரவிவர்மன் கை ஓங்கினாலோ, எட்டுவீட்டுப் பிள்ளைமார்களும் அவனும் ஒற்றுமை அடைந்து விட்டாலோ ஒருவேளை மறுபடி நம்மைப் புறக்கணிக்கும் துணிவு அவர்களுக்கு வரலாம்!" என்று படைத் தளபதி திருவாங்கூர் நிலைமையை விவரித்தான்.
மங்கம்மாள் தன் காலத்தில் மதுரைப் பெருநாட்டுக்குத் திறைப்பணம் செலுத்தாத மற்றவர்களைப் பற்றி நினைத்தபோது கிழவன் சேதுபதி முதலில் நினைவு வந்தார். மறவர் நாட்டைச் சுயாதீனமாக ஆளத்தொடங்கியிருந்தார் அவர்.
சேதுபதி மேல் படையெடுப்பதைவிட முதலில் ஓர் எச்சரிக்கை ஓலை அனுப்பிப் பார்க்கலாம் என்று ராணி மங்கம்மாள் நினைத்தாள்.
இராயசத்தையும், பிரதானிகளையும், கலந்து பேசி, ஓர் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பினாள். சேதுபதியிடமிருந்து சில நாட்களில் ஒரு தூதன் மூலம் வாய்வார்த்தையாகப் பதில் கிடைத்தது.
"மன்னர் சேதுபதி விரைவில் கூடல்மாநகருக்கு வருவார். அப்போது தங்களைக் கண்டு பேசுவார்."
தான் எழுதி அனுப்பிய ஓலையை மதித்துப் பதில் ஓலைகூட எழுதியனுப்பாமல் சேதுபதி தட்டிக்கழிப்பது புரிந்தது. சேதுபதி மதுரை நாட்டையோ, மங்கம்மாளின் ஆட்சியையோ லட்சியம் செய்ததாகவே தெரியவில்லை.
ரா-10