பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

147

மனத்தாங்கலை அந்தக் கிழட்டுச் சிங்கத்திடம் தெரிவிக்க முடியவில்லையே என்று தவித்தாள் அவள். ராணி மங்கம்மாள் திறைப்பணத்தை நினைவூட்டி ஜாடைமாடையாகப் பேசிய எந்தப் பேச்சுக்குமே பிடிகொடுக்காமல் பேசினார் சேதுபதி. புரிந்து கொண்டே அதைச் சாதுர்யமாகத் தவிர்த்தார்.

"உங்கள் மனத்தில் பல குழப்பங்கள் இருப்பது தெரிகிறது. ஒருமுறை புறப்பட்டு வந்து சேதுஸ்நானம் செய்து இராமேஸ்வர தரிசனம் பண்ணினால் எல்லாம் சரியாகிவிடும்! சேதுநாட்டின் அரசன் என்ற முறையில் உங்களை அழைப்பதில் மகிழ்கிறேன்" என்று தன்னுடைய சுயாதீனத்தை மறைமுகமாக வற்புறுத்தியே பேசிக் கொண்டிருந்தார் சேதுபதி.

ஆயிரம் இருந்தாலும் விருந்தினராக வந்திருக்கும் ஒரு முதியவரிடம் எப்படிக் கண்டிப்பாகக் கடிந்து பேசுவது என்று புரியாமல் திணறினார்கள் மங்கம்மாளும் இராயசமும்.

ஆனால் சேதுபதி எதற்கும் திணறவோ திகைக்கவோ செய்யாமல் நிதானமாகவே பேசினார், பழகினார். திறைகேட்கும் நாட்டு மகாராணியிடம் திறை தரமறுக்கும் உறுதியுடன், அதை இனிமையான உபசாரம் பூசிய மாற்று வார்த்தைகளால் மெல்ல மெல்லச் சொல்லிக் கொண்டிருந்தார் கிழவன் சேதுபதி.


19. நம்பிக்கைத் துரோகம்

ராணி மங்கம்மாளால் சேதுபதியை எதுவும் செய்ய முடியவில்லை. அசைக்க முடியாத கருங்கல்லாக இருந்துவிட்டார் அவர். ராணி மங்கம்மாளிடம் அடங்கிக் கப்பம் கட்டாததால் தான் தவறு செய்கிறோம் என்ற உணர்வே சேதுபதியிடம் இல்லை. இயல்பாகத் தான் இருக்க வேண்டிய நிலையே கப்பம் கட்டாமல் இருப்பதுதான்