பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148

ராணி மங்கம்மாள்

என்பதுபோல் வாளா இருந்தார் அவர். அவரை நிர்ப்பந்தப்படுத்தவோ ராணிமங்கம்மாளின் ஆட்சிக்குத் தாம் கடமைப்பட்டிருப்பதாக உணர்த்தவோ முடியவில்லை.

கட்டுப்பட்டிருக்கிறோம் என்பதே புரியாத ஒருவரை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று அறியாமல் திணறினாள் அவள், மங்கம்மாளின் கணவர் சொக்கநாத நாயக்கரின் இறுதிக் காலத்திலேயே ஏறக்குறைய அந்த மனநிலைக்கு வந்திருந்தார் அவர் ஆட்சி மங்கம்மாளிடமும், ரங்க கிருஷ்ணனிடமும் வந்தபோது கிழவன் சேதுபதியிடமும் அந்த உணர்வு உறுதிப்பட்டிருந்தது. ரங்ககிருஷ்ணனும் மறைந்த பின்னர் எதற்கும் யாருக்கும் கட்டுப்படாத சுதந்திரத் திளைப்பில் இருந்தார் அவர்.

ராணி மங்கம்மாள் கூப்பிட்டு அனுப்பிக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து வந்தவர்போல் அல்லாமல் அரச குடும்பத்து விருந்தினர் போல சில தினங்கள் வந்து மதுரையில் தங்கிவிட்டு அப்புறம் புறப்பட்டுச் சென்றார் கிழவன் சேதுபதி. அவரை யாராலும் அப்போது எதுவும் செய்யமுடியவில்லை.

மங்கம்மாள் மதுரை மாநகரில் தங்கியிருந்த ஆண்டுகளில் புதிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. மறவர் சீமையைத் தனி நாடாக்கிக் கொண்டதைத் தவிர வேறு வகை அத்துமீறல்களைச் சேதுபதி செய்யவில்லை என்பதே திருப்தியாக இருந்தது. திருவாங்கூர் மன்னன் ரவிவர்மன்கூட ஆண்டுதோறும் மதுரையிலிருந்து படைகளை அனுப்பிக் கொள்ளையிடப் போவது போல மிரட்டினால்தான் திறைப் பணம் கட்டுவதென்று வைத்துக் கொண்டிருந்தான். அவன் தானாக முன்வந்து கட்டவில்லை என்பதே ராணி மங்கம்மாளுக்கு எரிச்சலூட்டியது. மதுரைப் படைகளைக்கூட அவன் மதிப்பதற்கும் கண்டு மிரளுவதற்கும் வேறு ஒரு காரணம் இருப்பதாகத் தோன்றியது.

ரவிவர்மனது ஆட்சிக்கு அமைச்சர் முறையுடையவர்களாகிய எட்டு வீட்டுப் பிள்ளைமார்களின் ஓயாத விரோதத்தால் அவன் மதுரைப் படைகளை எதிர்க்கும் ஆற்றலின்றி இருந்தான். உள்நாட்டுக்