14
ராணி மங்கம்மாள்
“எங்கள் இளவரசர் ரங்ககிருஷ்ண முத்து வீரப்பர் சித்ரா பௌர்ணமிக்காகத் தரிசனத்துக்கு வந்த இடத்தில் நோய்வாய்ப்பட்டு மறுபடி திரிசிரபுரத்துக்கே திரும்பிவிட்டார். ஆகையால் நீங்கள் மதுரையில் சென்று அவரைச் சந்திக்க இயலாத நிலை“ என்று கோபப்படாமல் பதறாமல் அடக்கமாகச் சென்று பாதுஷாவின் படைத் தலைவனிடம் தெரிவியுங்கள்...”
“பாதுஷாவின் படைத்தலைவன் தங்களைப்பற்றி விசாரித்தால்...?”
“என்னை இதில் சம்பந்தப்படுத்த வேண்டாம். அரசியல் காரியங்களை இளவரசரே நேரில் கவனிப்பதாகச் சொல்லிக் கொள்! நான் செய்ய வேண்டியதைப் பின்னால் திரை மறைவிலிருந்து செய்து கொள்ள முடியும்“.
“பாதுஷாவின் படைகளும் செருப்பு ஊர்வலமும் நம் ராஜ தானியாகிய திரிசிரபுரத்துக்கே தேடிக் கொண்டு வந்தால்...?”
“அப்படி வந்தால் அவர்களையும் அந்த பழைய செருப்பையும் எப்படிச் சந்திக்க வேண்டுமோ அப்படிச் சந்திக்க எல்லாம் ஆயத்தமாயிருக்கும், கவலை வேண்டாம். பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. வீரர்களே! நாம் கடவுளுக்குப் பக்தர்களாக இருக்க முடியுமே ஒழிய மனிதர்களுக்கு அடிமைகளாக இருக்க முடியாது.”
இதைக் கூறும் போது ராணியின் குரலில் அழுத்தமும் காம்பீர்யமும் ஓர் உத்தரவின் உறுதியும் தொனித்தன.
இப்படி உத்தரவு கிடைத்தபின் ராணியையும் இளவரசரையும் வணங்கிவிட்டுப் புறப்பட ஆயத்தமான படை வீரர்களின் தலைவனை மீண்டும் அருகே அழைத்துத் தணிந்த குரலில் அவனிடம் சில இரகசிய உத்தரவுகளையும் பிறப்பித்த பின், “நினைவிருக்கட்டும்! நான் கூறியதை எல்லாம் உடனே நிறைவேற்று. நானும் இளவரசரும் இன்று மாலையிலேயே திரிசிரபுரம் புறப்பட்டுப் போய்விடுவோம்” என்றாள் அவள்.