பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

159

வேறு சில அபவாதங்களை நாமாக அழிக்கவே முயலாமல் அது தானே ஓடியாடி அலுத்துப் போய் இயல்பாகச் சாகும்படி விட்டுவிட வேண்டும். தானே சாகிற அபவாதங்களை உயிர்ப்பிக்கும் முயற்சியிலோ உடனே கொன்றுவிட வேண்டிய அபவாதங்களைத் தொடரவிடுகிற முயற்சியிலோ இறங்கிவிடக்கூடாது என்ற ராணி மங்கம்மாள் வழக்கமான ராஜதந்திர உணர்வு அவளை எச்சரித்தது.

எதிர்பாராமல் இப்போது தன்மேல் ஏற்பட்டிருக்கும் இந்த அபவாதத்தை அவள் பெரிதுபடுத்த விரும்பவில்லை. இயல்பாக மூத்துப்போய் தானே அழியட்டும் என்று விட்டு விடவிரும்பினாள். அச்சையாவிடமும் வித்தியாசம் காண்பிக்காமல் எப்போதும் போலப் பழகினாள். குழந்தை விஜயரங்கன் பெரியவனானால் தனக்கு ஒரு நல்ல துணையும் பாதுகாப்பும் கிடைத்துவிடும். இத்தகைய வீண் அபவாதங்களெல்லாம் வராது என்று நம்பிக்கையோடு இருந்தாள். அரசியல் காரியங்களில் கவனம் செலுத்தினாள்.

நாட்கள் சென்றன. ரவிவர்மனின் நம்பிக்கைத் துரோகத்திற்குப் பதிலடி கொடுக்கச் சென்ற படைகளின் நிலையைப் பற்றித் தகவல் அறிய ஆவலாயிருந்தாள் மங்கம்மாள்.

மிகச் சில நாட்களில் நல்ல செய்தி கிடைத்தது. நம்பிக்கைத் துரோகம் செய்த இரவிவர்மனுக்குப் பாடம் கற்பிக்கத் தளபதி நரசப்பய்யாவின் தலைமையில் சென்ற படைகள் வெற்றி மேல் வெற்றி பெற்று கற்குளம் கோட்டையையே நோக்கி முன்னேறிக் கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இறுதியில் கற்குளம் கோட்டையைப் பிடித்துத் திருவாங்கூர் மன்னனை வென்று அவன் அதுவரை செலுத்தாதிருந்த திறைப்பணம் முழுவதையும் பெற்று வெற்றி வாகைசூடிய புகழுடன் திரும்புவதாகத் தளவாய் நரசப்பய்யாவின் தூதன் வந்து தெரிவித்தபோது ராணி மங்கம்மாளுக்கு நிம்மதியாயிருந்தது. அவள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தாள். நரசப்பய்யாவின் திறமையை வியந்தாள்.

ஆனால் அவளது மகிழ்ச்சி இரண்டு முழு நாட்கள் கூட நீடிக்கவில்லை. படைகளும் படைத் தலைவர்களும் தளபதி