பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166

ராணி மங்கம்மாள்

தோல்வியிலும், விரக்தியிலும் மிகவும் ஆத்திரம் அடைந்த தஞ்சை மன்னன் இந்த விளைவுகளுக்கு எல்லாம் காரணம் தன் பிரதான அமைச்சன் பாலோஜிபண்டிதனே என்றெண்ணினான். அவனது யோசனைகளால்தான் இவ்வளவு கெடுதலும் ஏற்பட்ட தென்று தோன்றவே ஷாஜியின் முழு ஆத்திரமும் அவன்மேல் திரும்பியது. ஷாஜியின் இந்த மனநிலையைப் புரிந்து கொண்டு பாலோஜி பண்டிதனின் எதிரிகள் வேறு இதற்குத் தூபம் போட்டனர். பாலோஜியை எப்படியும் தொலைத்தாக வேண்டுமென்று ஷாஜிக்கு யோசனை கூறினார்கள்.

அமைச்சன் பாலோஜி நிலைமையை அறிந்தான். தந்திரத்தால் தான் அரசன் மனத்தை மாற்ற வேண்டுமென்று தீர்மானித்தான். நேரே அரசன் ஷாஜியிடம் போய், "அரசே! கோபப்படாதீர்கள். தயவு செய்து எனக்கு மட்டும் ஒருவார காலம் தவணை கொடுங்கள்! திரிசிரபுரத்து வீரர்களுக்கும் நமக்கும் ஏற்பட்ட பகையைச் சரிசெய்து எல்லாவற்றையும் சமாதானமாக முடித்துத் தருகிறேன்" என்று மன்றாடினான். ஷாஜியும் அதற்கு ஒருவாறு சம்மதித்தான்.

தஞ்சையில் நிலைமை இவ்வாறு இருக்கத் திரிசிரபுரம் நகரம் வெற்றிக் களிப்பில் திளைத்திருந்தது. திருவிதாங்கூர் ரவிவர்மனின் கொட்டத்தை ஒடுக்கிவிட்டுத் திரும்பிய சுவட்டோடு தஞ்சையையும் வெற்றி கொண்டிருந்தார் நரசப்பய்யா.

படைகள் தஞ்சைக்குப் புறப்பட்டபோதே இந்த வெற்றியைப் பற்றி ஆரூடம் கூறிய இஸ்லாமியரை இப்போது நினைத்தாள் ராணி மங்கம்மாள். அப்போது வாயிற் காவலர்கள் வந்து கூறினார்கள்:

"அரண்மனை வாயிலில் யாரோ தங்களைக் காணத் தேடி வந்திருக்கிறார். இப்போதுள்ள பரபரப்பில் தங்களைக் காண முடியாதென்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவர் கேட்பதாயில்லை. தாங்கள் ஏற்கனவே தஞ்சைப் போர் முடிந்ததும் அவரைச் சந்திப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறீர்களாம்."

அந்தப் பக்கிரியாகத்தான் இருக்க வேண்டுமென்று நினைத்தாள் ராணி மங்கம்மாள். "அவருக்கு ஆயுள் நூறாண்டு" என்று மனத்துக்குள் அவரை வாழ்த்தினாள்.