உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

167

"வந்திருப்பவரை இப்போதே உள்ளே அழைத்துவா” என்று காவலருக்கு உத்தரவு இட்டாள். தேடி வந்திருப்பவர்மேல் ராணிக்கு இருந்த அக்கறை காவலருக்கே எதிர்பாராத ஆச்சரியத்தை உண்டாக்கியிருக்க வேண்டும். காவலர்கள் உடனே விரைந்தோடிச் சென்று அந்த இஸ்லாமியரை அழைத்து வந்தனர்.

அரண்மனைக்குள்ளே வந்ததும் ராணியை வணங்கினார் அவர். ராணி மங்கம்மாள் அவரைப் பிரியத்தோடும் மரியாதையோடும் வரவேற்றாள்.

"ஐயா! நீங்கள் கூறியபடி தஞ்சையில் எங்களுக்குப் பெரு வெற்றி கிடைத்திருக்கிறது. முதலிலேயே நீங்கள் தான் நல்வாக்குக் கூறினீர்கள் இதோ இந்தப் பரிசுப் பொருள்களை என் அன்பின் அடையாளமாக ஏற்றுக் கொள்ளுங்கள்."

"நான் ஏழைதான், ஆனால் பரிசுகள் எதுவும் எனக்குத் தேவையில்லை மகாராணி என் வார்த்தைகள் பலித்து நீங்கள் வெற்றி பெற்றதில் நானடைந்திருக்கும் மகிழ்ச்சியைத் தெரிவிக்கவே வந்தேன்."

"பரிசுகள் வேண்டாம் என்கிறீர்! வேறு ஏதேனும் உதவியை நான் செய்ய முடியுமானால் சொல்லுங்கள். உடனே செய்கிறேன்."

"எனக்குச் சொந்தமாக எதுவும் வேண்டாம் மகாராணி! தெய்வபக்தி மிகுந்த மக்களுக்குப் பொதுவாக ஓர் உதவி நீங்கள் செய்ய வேண்டும். இன்று நிராதரவாகவும் ஏழையாகவும் ஆகிவிட்ட என்னிடம் பெனுகொண்டா நகரின் தர்க்கா ஒன்றைக் கவனித்து நிர்வகிக்கும் பொறுப்பு இருக்கிறது. அடிக்கடி நடக்கும் போர்களால் தர்க்காவின் நிர்வாகம் சரியாக நடைபெறவில்லை. தர்க்காவுக்கென்று இருக்கும் பரம்பரைச் சொத்துகளிலிருந்தும் வருமானம் சரியாகக் கிடைக்கவில்லை."

"நான் என்ன செய்ய வேண்டுமோ சொல்லுங்கள் உடனே செய்ய உத்தரவிடுகிறேன்."

"அந்தத் தர்க்கா நிர்வாகமும் அதில் வழிபாடும் சரியாக நடைபெற உதவினால் இந்த ஏழையின் மனம் மகிழ்ச்சி அடையும் மகாராணி!"