பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

169

தேடி வந்திருப்பவர்கள் ஏழைகள்உழவர்கள் என்பதனால் அவர்களை அலைக்கழிக்காமலும், இழுத்தடிக்காமலும் உடனே, பார்ப்பதுதான் முறை என்று எண்ணி அவர்களை அப்போதே தன்னைச் சந்திக்க அனுமதிக்குமாறு காவலர்களிடம் கூறி அனுப்பினாள்.

சிறிது நேரத்தில் உழவர்கள் கூட்டமாக அவளைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் முகங்களில் எல்லாம் பயமும் கவலையும் அணைகட்டித் தேக்கினாற் போலிருந்தன. அவர்களுக்கு ஏதோ தீராத பிரச்சினை இருக்கவேண்டும் என்று ராணி மங்கம்மாளால் பார்த்த அளவிலேயே அனுமானிக்க முடிந்தது.

அவள் அவர்களை அன்போடு கேட்டாள்:

"உழவர் பெருமக்களே! உங்கள் கவலை என்ன? என்னால் முடியுமானால் உங்கள் கவலையைக் களைவேன். தயங்காமல் சொல்லுங்கள்."

"மகாராணி திடீரென்று காவிரியில் நீர் வற்றி வறண்டுவிட்டது மேல்மழை பெய்ததும் சரியாகும் என்று நினைத்துக்காத்திருந்தோம். அப்படியும் சரியாகவில்லை. சோழ நாட்டின் பெரும்பகுதி நிலங்களும் எங்களை ஒத்த விவசாயிகளும் காவிரியை நம்பித்தான் இருக்கிறோம் என்பது தாங்கள் அறியாததில்லை. மைசூர் மன்னன் சிக்கதேவராயனுக்கும், தங்களுக்கும் உள்ள பகையினால் தங்களுக்கும் தங்களது நாட்டு மக்களுக்கும் தொல்லை கொடுக்கக் கருதி மைசூரார் காவிரியை அணை எடுத்துத் தேக்கிவிட்டார்கள் என்று கேள்விப்படுகிறோம். காவிரி வறண்டிருப்பதால் உழவர்களாகிய எங்கள் வாழ்வும் வறண்டுவிட்டது."

சிக்கதேவராயன் காவிரியை அணை கட்டித் தடுத்து நிறுத்தி விட்டான் என்று கேள்விப்பட்டு ராணி மங்கம்மாள் ஆச்சரியப்படவில்லை. அவன் அப்படித்தான் செய்திருக்கக் கூடும் என்பதில் அவளுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. திரிசிரபுரத்தை முற்றுகையிட்ட சிக்க தேவராயரின் படைகளையும், தளபதி குமரய்யாவையும், தாங்கள் மைசூருக்குத் துரத்தியபின்பே இப்படிப் பழிவாங்கும் எண்ணம் அவனுக்கு ஏற்பட்டிருக்க வேண்டுமென்று தோன்றியது.