பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

ராணி மங்கம்மாள்

இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதாக உழவர்களுக்கு ஆறுதலும் மறுமொழியும் கூறி அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டு, இராயசத்தையும், பிரதானிகளையும் படைத் தலைவர் நரசப்பய்யாவையும் உடனே அது பற்றிக் கலந்து ஆலோசித்தாள் அவள்.

"இந்தக் காவிரி நீர்ப் பிரச்சினையால் நாம் மட்டும் பாதிக்கப்படவில்லை. அண்டை நாடாகிய தஞ்சை நாட்டுக்கு நம்மைவிட அதிகப் பாதிப்பு ஏற்படும்" என்றார் இராயசம்.

அவர் இப்படிக்கூறி முடிக்கவும் வாயிற்காவலன் உள்ளே வந்து தஞ்சையின் மன்னர் ஷாஜியின் பிரதிநிதியாக அமைச்சர் பாலோஜி சந்திக்க வந்திருப்பதாகத் தெரிவிக்கவும் சரியாயிருந்தது. ஏற்கனவே தஞ்சை அரசன் ஷாஜியின் கோபத்துக்கு ஆளாகியிருந்த பாலோஜி தன் ஆள்கள் மூலம் தஞ்சை நாட்டின் பெருவணிகர்களையும், செல்வர்களையும் தன் உறவினர்களையும் வற்புறுத்திப் பெரும் பொருள் திரட்டியதோடு அரசாங்கக் கருவூலத்திலிருந்து ஒரு பெருந்தொகையையும் எடுத்துக்கொண்டு திரிசிரபுரத்துக்கு வந்திருந்தான். திரட்டிய பொருளைத் திறைப்பணமாக அளித்து ராணி மங்கம்மாளோடு சமாதானம் செய்துகொண்டு அந்த சமாதானத்தைச் செய்து வந்தவன் என்ற பெருமையில் தன் அரசனான ஷாஜியின் கோபத்தைத் தணிக்க முயலவேண்டும் என்பது பாலோஜியின் திட்டமாக அப்போது இருந்தது.

திடீரென்று திரிசிரபுரம், தஞ்சை இரு பகுதி ஆட்சிக்கும் நிர்ப்பந்தத்தை உண்டாக்கும் பொருட்டு மைசூர் மன்னன் ஏற்படுத்திவிட்ட காவிரிநீர்த் தடுப்பு பிரச்சினை பாலோஜிக்கு இப்படி, ஓர் இராஜதந்திர லாபத்தை உண்டாக்கித் தந்தது.

மைசூர் மன்னன் சிக்கதேவராயன் என்கிற பொது எதிரியைத் தொலைக்கும் முகாந்திரத்தை முன்வைத்து ராணி மங்கம்மாளையும், தஞ்சை மன்னன் ஷாஜியையும் சமாதானப்படுத்த முடியும் என்ற புது ஞானோதயம் பாலோஜிக்கு உண்டாயிற்று. அதை வெறும் சமாதானமாக மட்டும் நிறுத்திவிடாமல் சிநேகிதமாக மாற்றித் திரிசிரபுரம், தஞ்சை இரண்டையும் நட்பு நாடுகளாக்கிவிடத்