பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

ராணி மங்கம்மாள்

சுற்றுப்புறங்களையும் மறவர் படையோடு வந்து ஆக்கிரமித்தது அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது.

காவிரி நீர்ப்பிரச்சினையை ஒட்டி நட்பு ஏற்படுவதற்கு முன்னர் சேதுபதியே ஒருமுறை மங்கம்மாளுக்கு எதிரணியில் தஞ்சை மன்னர் ஷாஜியோடு இணைந்து மங்கம்மாளுக்குத் தொல்லை கொடுத்திருக்கிறார். இப்போது அதே சேதுபதியை எதிர்த்து ஷாஜியைத் தன் அணியில் திரட்ட வேண்டிய கட்டாயமும் நிர்ப்பந்தமும் மங்கம்மாளுக்கு ஏற்பட்டன.

இதற்கு முன்னால் ஒருமுறை சேதுபதி மதுரை நகரைக் கைப்பற்றி ஆள முயன்றபோது ஷாஜியின் துணையின்றியே தளவாய் நரசப்பய்யா மதுரைக்குப் படை எடுத்துச் சென்று தனியே வென்றிருக்கிறார். இப்போது தஞ்சைப் படைகளும் உதவிக்குக் கிடைக்கிற காரணத்தால் தளவாய் நரசப்பய்யா சேதுபதியை ஓடஓட விரட்டிவிடலாம் என்றே எண்ணினார்.

முன்பு தன் மகன் ரங்ககிருஷ்ணன் சேதுபதியை அடக்கி வெற்றி கொள்ள முடியாமல் திரும்பியதிலிருந்து தொடர்ந்து அவர் அடங்க மறுத்து வந்திருக்கிறார் என்பதை நினைவு கூர்ந்த ராணி மங்கம்மாள் மதுரையைக் கைப்பற்றிய நிகழ்ச்சியை அவரது அடங்காமையின் அதிக எல்லையாகக் கருதினாள். திமிர் நிறைந்த காரியமாக எண்ணினாள்.

பேரன் விஜயரங்கன் வளர்ந்து பெரியவனாகிப் பொறுப்பை ஏற்கும் நாள்வரை நாட்டின் எல்லைகள் பறிபோகாமல் கட்டிக் காக்கவேண்டிய அவசியம் அவளுக்கு இருந்தது. விஜயரங்கன் அவனுடைய தந்தை ரங்ககிருஷ்ணனைப் போல் இளம் பருவத்திலேயே அரசியல் பொறுப்புகளை ஏற்கக்கூடிய பக்குவமுள்ளவனாக இல்லை. சின்னஞ்சிறு வயதில் அவனை நம்பி முடிசூட்டுவது அவனையும் நாட்டையும் அபாயத்தில் கொண்டு போய் விட்டுவிடக்கூடும் என்பது ராணி மங்கம்மாளுக்கே தெளிவாகப் புரிந்திருந்தது. விளையாட்டுப் பிள்ளையாகவும், விடலையாகவும் அவன் இருந்தான்.