16
ராணி மங்கம்மாள்
அடைந்திருந்தும் தாய் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் உள்ளூறத் திட்டமிடுகிறாள் என்பதும் விளங்கிற்று.
அங்கே தமுக்கம் ராஜமாளிகையின் மேல் மாடத்திலிருந்து கம்பீரமாகத் தெரிந்த மதுரை மாநகரின் முழுமையான தோற்றமும், வையை நதியும் நகரின் இடையே இருந்தாலும் நகரை விட நாங்கள் உயர்ந்தவை என்பதுபோல் மேலெழுந்த கோபுரங்களும் அவனுள்ளே இருந்த பெருமிதத்தை வளர்த்தன. அவன் தோள்களைப் பூரிக்கச் செய்தன.
பகல் உணவுக்குப் பின் சிறிது களைப்பாறிவிட்டுத் தாயும், மகனும் திரிசிரபுரத்துக்குப் புறப்பட்டார்கள். அந்தப் பல்லக்குப் பயணம் மிகவும் பரபரப்பான மனநிலையோடு துரிதமாக மேற்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. வழி நெடுகிலும் இரைபட்டுக் கிடந்த வசந்த கால வளங்களைப் பார்க்கும் பொறுமையோ மனநிலையோ அப்போது அவர்களுக்கு இல்லை. மனதில் வேறு காரியமும் அதைப் பற்றிய கவலையும் இருந்தன. ஆற்றில் அழகர் இறங்குவதைத் தரிசனம் செய்து விட்டுத் திரும்புவோரும், தொடர்ந்து நடைபெறவிருந்த திருவிழாவைக் காண மதுரை மாநகருக்குச் செல்லுவோருமாகச் சாலையெங்கும் கலகலப்பாக இருந்தது. மதுரையின் திருவிழா வனப்பு சாலைகளிலும், சோலைகளிலும் தர்ம சத்திரங்களிலும் வழிப் பயணிகளிடமும் தேசாந்தரிகளிடமும் கூடத் தெரிந்தது. பால் பொழிவது போன்ற அந்த முழுநிலா இரவில் பிரயாணம் செய்யும் சுகத்தைக் கூட அவர்கள் அப்போது உணரவில்லை. சூரியாஸ்தமனமோ சந்திரோதயமோ கூட அவர்கள் மனத்தைக் கவரவில்லை.
அந்தப் பல்லக்கில் அமர்ந்திருப்பவர்களின் மனநிலையைப் பிரதிபலிப்பதுபோல் அதைத் தூக்கிச் சென்றவர்கள் வாயு வேகத்தில் விரைந்து கொண்டிருந்தனர். ரங்ககிருஷ்ணன் பல்லக்கினுள் எதிரே அமர்ந்திருந்த தன் தாயைக் கேட்டான்.
“அம்மைய நாயக்கனூரிலிருந்தும் திண்டுக்கல்லிலிருந்தும் பாதுஷாவின் செருப்பு ஊர்வலத்தைப் பற்றிச் சொல்லிவிட்டுப் போக வந்தவர்களிடம் எனக்கு உடல் நலமில்லை என்றும் அதனால் நான்