பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

ராணி மங்கம்மாள்

இருந்தார். இவருடைய மறவர் சீமைப்படைகள் முன்னேற்பாட்டுடனும், கட்டுப்பாடாகவும் இருந்தன. விரைந்து சென்று குறிப்பிட்ட குறுகிய காலத்தில் கொள்ளையடித்து முடித்துக்கொண்டு திரும்பிவிடுகிறாற் போன்ற ஒரு சுறுசுறுப்பு மறவர் சீமைப் படைகளிடம் இருந்தன. முன்னைவிட எண்ணிக்கையில் அதிகமான மறவர் சீமைப் படையை ஆயத்தமாக வைத்திருந்தார் அவர்.

"’ஒருவேளை திரிசிரபுரத்திலிருந்த ராணி மங்கம்மாளின் படை மதுரையை நோக்கி வருமானால்’ என்று அதை முன் ஏற்பாடாக எதிர்பார்த்து வருகிற படையை எங்கெங்கே எதிர்கொண்டு எப்படி எப்படித் தாக்குவது என்றெல்லாம் தீர்மானமாகத் திட்டமிட்டு வைத்திருந்தார் சேதுபதி. இராஜதந்திரத்திலும் உபாயங்களிலும் எதிரிகளை எப்படி எப்படி எல்லாம் மடக்கி அழிக்கலாம் என்ற சாதுரியத்திலும் தேர்ந்தவரான கிழவன் சேதுபதி தீர்க்கதரிசனத்தோடு எல்லாத் தற்காப்பு ஏற்பாடுகளையும் செய்து வைத்துக் கொண்டிருப்பதை நரசப்பய்யா எதிர்பார்க்கவில்லை.

தான் முன்பு ஒருமுறை வென்றதுபோல் இம்முறையும் கிழவன் சேதுபதியைச் சுலபமாக வென்று வெற்றிவாகை சூடிவிடலாம் என்ற நம்பிக்கையோடு திரிசிரபுரத்திலிருந்து மிகவும் அலட்சியமான எண்ணத்தோடு படைகளோடு புறப்பட்டிருந்தார் நரசப்பய்யா.

சேதுபதியின் திட்டமும் ஏற்பாடுகளும் வேறுவிதமாக இருந்தன. நரசப்பய்யாவின் படைகள் மதுரையை அடைவதற்கு முன்பே களைத்து சோர்ந்துபோய் விடும்படி நடுவழிகளிலேயே அவர்களை மறித்துத் தாக்குவதற்கான மறவர் சீமைப் படைகளை அங்கங்கே பிரித்து மறைந்திருக்கச் செய்திருந்தார் சேதுபதி. இதை எதிர்பார்க்கவோ அனுமானிக்கவோ இயலாத நரசப்பய்யா படைகளோடு முன்னேறிக் கொண்டிருந்தார். நரசப்பய்யாவின் அலட்சியப் போக்கு ஆபத்தாக முடியுமென்று யாருக்குமே முதலில் தெரிந்திருக்கவில்லை.

பேரன் விஜயரங்கனுக்கு ஒரு குறையுமில்லாத முழுப் பேரரசை அப்படியே கட்டிக்காத்து அளித்து முடிசூட்ட வேண்டுமென்ற ஆசையில் ராணி மங்கம்மாளுக்கு தளவாய் நரசப்பய்யாவைப் படைகளுடன் மதுரைக்கு அனுப்பிவிட்டுக் காத்திருந்தாள்.