பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

179

படைகள் மதுரை எல்லையை அடையுமுன்பே குழப்பமான செய்திகள் ஒவ்வொன்றாக வந்தன. ராணி மங்கம்மாளின் நம்பிக்கை தளர்ந்தது. மறவர் சீமையைக் கடந்து மதுரைப் பகுதிக்குள் நுழைவதற்கு முன்னதாகவே மங்கம்மாளின் படைத்தலைவர் நரசப்பய்யா கொலையுண்டு இறந்து போனார்.

தளபதியை இழந்த படைகள் அதிர்ச்சியில் சிதறிப் பிரிந்தன. படைகளைப் பகுதி பகுதியாகப் பிரித்துத் திடீர் திடீரென்று மறைந்திருந்து தாக்கினார் மறவர் சீமை வீரர்கள். படைகள் புறமுதுகிட்டன. சேதுபதியை அழிக்க முடியவில்லை. தஞ்சைப் படைகளும் அறத்தாங்கி வழியாகத் திரும்பி ஓட்டமெடுத்தன.

கிழவன் சேதுபதியிடம் தோற்ற இந்தத் தோல்வி ராணி மங்கம்மாளுக்குப் பேரிடி ஆயிற்று. பல ஆண்டுகள் மதுரைச் சீமையைப் பற்றி நினைப்பதுகூடக் கெட்ட கனவாக இருந்தது. கிழவன் சேதுபதி என்ற பெயரே சிம்மசொப்பனமாகிவிட்டது. அவரை அவளால் அசைக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்றும் சேதுபதி மடங்காமல் நிமிர்ந்து நின்று தன்னிச்சையாக ஆட்சி நடத்த முற்பட்டுவிட்டார்.

சில ஆண்டுகளில் மறவர் சீமைப் பகுதிகளிலும், இராமநாத புரத்திலும் ஒரு கடும் வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டன. அதே நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு ராணி மங்கம்மாளின் ஒத்துழைப்போடு தஞ்சை மன்னன் ஷாஜி மறவர் சீமையின் மேல் படையெடுத்தான்.

ராணி மங்கம்மாள் தான் நேரடியாக ஈடுபடாவிட்டாலும் ஷாஜியைக் கொண்டு சேதுபதியை இம்முறை ஒடுக்கிவிடும் நோக்குடன் அவனுக்கு எல்லா உதவிகளையும் மறைவாகச் செய்திருந்தாள்.

ஷாஜியின் படையெடுப்பு மார்க்கம் இம்முறை மாற்றப்பட்டிருந்தது. தஞ்சையிலிருந்து படைகள் அறந்தாங்கி வழியாக நாட்டிற்குள் நுழைந்தன.

சோற்றுப் பஞ்சமும் தண்ணீர்ப் பஞ்சமும் மறவர் சீமை வீரர்களை நலியச் செய்திருக்கும் என்று ஷாஜியும் மங்கம்மாளும் போட்டிருந்த கணக்குத் தப்பாகிவிட்டது.