பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

ராணி மங்கம்மாள்

பிரிட்டோ பாதிரியாரும் தாம் இதற்கு முன்பு செய்தது போல் தயக்கமோ பயமோ இல்லாமல் தமது உயிரையே இழந்தாலும் பரவாயில்லை என்கிற அளவு துணிச்சலுடன் மதமாற்ற முயற்சிகளில் தீவிரமாக இறங்கினார். இராமநாதபுரத்து மறவர் சீமையைச் சேர்ந்த இந்துக்களின் எதிர்ப்பைக்கூட அவர் பொருட்படுத்தவில்லை.

கிழவன் சேதுபதிக்குப் பிறகு அல்லது அவர் உயிருடன் இருக்கும்போதே ஆட்சி தடியத்தேவருக்குக் கிடைக்கும்படிச் செய்யப்படும் என்ற ஆசை வார்த்தைகளும், கிழவன் சேதுபதி மேலிருந்த வெறுப்புமே தடியத்தேவர் கிறிஸ்தவத்தை விரும்பி ஏற்கச் செய்திருந்தன.

இராமநாதபுரம் மன்னர்களுக்குப் பல மனைவியர் இருந்ததினால் அரசுரிமை வாரிசுகள் என்று சிலரே தகுதி பெற்றனர். அந்தச் சிலரில் கிழவன் சேதுபதி பட்டம் ஏற்றிருக்காவிட்டால் தடியத்தேவர் தான் பட்டமேற்றிருப்பார் என்கிற அளவிற்கு நெருக்கமாக இருந்தும் அவரது வாய்ப்புத் தவறிப் போயிருந்தது. தடியத்தேவர் விரக்தியோடிருந்தார். அத்தகையவரைத் தேடிப் பிடித்துக் கிறிஸ்தவராக்கிய ஜான்டி பிரிட்டோவின் செயல்கள் கிழவன் சேதுபதிக்குப் பலத்த சந்தேகங்களை உண்டாக்கின. ஆட்சியை அபகரிப்பதற்கான சதியோ என்றுகூட இதனைப் பற்றிக் கிழவன் சேதுபதி நினைத்தார்.

இந்தச் சந்தேகத்துக்குக் காரணம் இல்லாது போகவில்லை. கிழவன் சேதுபதி மறவர் சீமையின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்காவிட்டால் தடியத்தேவர்தான் அதை ஏற்றிருப்பார் என்கிற அளவு நெருக்கமான வாரிசாக இருந்தார். அவர், தடியத்தேவரை மதம் மாற்றியது கிழவன் சேதுபதியைச் சீறி எழச் செய்தது. இதற்கு மற்றொரு காரணமும் இருந்தது.

தடியத்தேவர் கிறிஸ்தவ மதத்துக்கு மாறும் முன் தமக்கிருந்த ஐந்து மனைவிமார்களில் நான்கு பேரை விலக்கிவிட்டு ஒரே ஒருத்தியை மட்டும் மனைவியாக ஏற்க வேண்டியதாயிற்று. மற்ற நால்வரையும் தள்ளி வைப்பது தவிர்க்க முடியாது போயிற்று. அப்படி அவர் நீக்கி வைத்த நான்கு மனைவிமார்களில் ஒருத்தி கிழவன்