பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

186

ராணி மங்கம்மாள்

தொடர்ந்து கிறிஸ்தவ சமய அன்பர்களும், மதகுருமார்களும் தொல்லைக்கு ஆளானார்கள்.

பெர்னார்டு பாதிரியார் என்ற மற்றொரு குரு முப்பத்திரண்டு பற்களும் நொறுங்கி உதிருமாறு தாக்கப்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பெர்னார்டு பாதிரியாரின் சீடர்கள் பிரக்ஞை மங்கித் தரையில் விழுகிற வரை சவுக்கடி பெற்றார்கள். இவற்றை எல்லாம் கேள்விப் பட்டு ராணி மங்கம்மாள் மனம் வருந்தினாள். மறவர் நாட்டிலும், தஞ்சையிலும் கிறிஸ்தவர்களும், கிறிஸ்தவ மத குருக்களும் கொடுமைப்படுத்தப்பட்டது போல் தன் ஆட்சியில் எதுவும் நடைபெற்றுவிடாமல் பொது நோக்கோடு கவனித்துக் கொண்டாள் அவள். தன் சொந்த மதமாகிய இந்து மதத்தின் மேலுள்ள பற்றை விட்டுவிடாமல் கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பேருதவிகளைச் செய்து மிகவும் பரிவுடன் நடந்து கொண்டாள் அவள்.

கிழவன் சேதுபதி பிடிவாதத்தாலும், கோபத்தாலும் தொடர்ந்து சிறைவாசத்தை அநுபவித்துச் சாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த மெல்லோ பாதிரியார் உயிர் பிழைத்துச் சிறையிலிருந்து விடுதலை பெறவும் மங்கம்மாள் உதவி செய்தாள். இப்போதும் இதற்கு முன்பும் இப்படிப் பல உதவிகளைச் செய்து, புகழ்பெறுவது அவளது இயல்பாக இருந்து வந்திருக்கிறது.

இதற்கு முன்பு ஒரு முறை மதுரையில் புச்சட் என்னும் பாதிரியாருக்கும் அவருக்குக் கீழே பணிபுரிந்த உபதேசியார்களுக்கும் ஏற்பட்ட சர்ச்சையைத் தளவாய் நரசப்பய்யா உயிரோடிருந்த காலத்தில் அவர் மூலம் சுமுகமாகத் தீர்த்து வைத்து நல்ல பெயரெடுத்திருந்தாள். பள்ளி வாசலுக்கும் தர்க்காக்களுக்கும், கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும் நிறைய மானியங்களும், நிலங்களும் அளித்துப் பெயர் பெற்றிருந்தாள். அதே சமயத்தில் இந்துக் கோயில்களுக்கும் எண்ணற்ற அறங்களைச் செய்திருந்தாள்.

மங்கம்மாள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுக்கு நன்மை செய்வதைப் போலவே இந்துக்களில் ஒரு பிரிவினராகிய செளராஷ்டிரர்களுக்கு நியாயமான உரிமைகளை வழங்கினாள். செளராஷ்