பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192

ராணி மங்கம்மாள்

பரிவுடன் இல்லாததோடு வெறுப்புடன் இருக்கிறான் என்பதும் புரிந்தது. அவனாகக் கெட்டுப்போனானா அல்லது அவன் மனத்தை யாராவது வலிந்து முயன்று கெடுத்தார்களா என்பது அவளுக்குப் புரியவில்லை. அவள் மனம் அலை பாய்ந்தது. அமைதி இழந்தது. தன்னை வளர்த்து ஆளாக்கியவள் என்று பாட்டியாகிய ராணி மங்கம்மாளின் மேல் விசுவாசம் கொள்வதற்குப் பதில் ஆத்திரமும் எரிச்சலும் கொண்டிருந்தான் விஜயரங்கன். இந்த நிலையைக் கண்டு அவள் திகைத்தாள். மனம் தளர்ந்தாள்.

தான் செய்த எல்லா நல்ல செயல்களையும் புண்ணியங்களையும் நினைத்து மனம் குமுறினாள். கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் பேதமின்றி நலங்களைப் புரிந்ததையம் வேண்டிய போதெல்லாம் விரைந்து சென்று உதவியதையும் எண்ணித் தனக்கா இப்படி அபவாதங்களும் விசுவாசத் துரோகங்களும் ஏற்படுகின்றன என்று மனம்மறுகி அலமந்து போனாள்.

பேரனின் போக்கும் மற்ற நிகழ்ச்சிகளும் அவளை நடைப் பிணமாக்கியிருந்தன. ஒருநாள் பகலில் உணவுக்குப் பின்னர் அந்தப்புரத்தில் அரண்மனைப் பணிப் பெண்கள் சூழத் தாம்பூலம் தரிப்பதற்கு அமர்ந்தாள் ராணி மங்கம்மாள். மனம் வேறு எதையோ பற்றி நினைத்தபடி இருந்தது. உண்ணும்போது உணவிலும் மனம் செல்லவில்லை. கடனைக் கழிப்பது போல் உண்டு முடித்திருந்தாள். தாம்பூலம் தரிக்கும்போதும் அவளுடைய கைகள் ஏதோ இயங்கிச் செயல்பட்டனவேயன்றி மனம் அதில் இல்லை. அவள் விரும்பியிருந்தால் பணிப் பெண்களே பவ்யமாக அவளுக்கு வெற்றிலை மடித்துக்கொடுத்திருப்பார்கள். ஆனால் அவள் அவர்கள் யாரையும் நாடாமல் தானே வெற்றிலையை நரம்பு கிள்ளிச் சுண்ணாம்பு தடவி மடித்து உண்டுகொண்டிருந்தாள்.

திடீரென்று ஒரு வயது முதிர்ந்த பணிப்பெண் ராணி மங்கம்மாளை நோக்கிக் கூப்பாடு போட்டாள்.

"அம்மா! உங்களை அறியாமலே ஆகாத காரியம் பண்ணிக் கொண்டிருக்கிறீர்களே! இடக் கையால் வெற்றிலை மடித்துப்