பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

197

ஏறவே விடமாட்டாள். நீ இப்படியே வெறும் இளவரசு பட்டத்தைச் சுமந்து கொண்டு திரியவேண்டியதுதான். கடைசிவரை உன்னிடம் ஆட்சியை ஒப்படைக்காமலே உன்னை ஏமாற்றி விடுவாள் இவள். போதாக்குறைக்குத் தளவாய் அச்சையா வேறு இப்போது உன் பாட்டியோடு நெருக்கமாக இருக்கிறார். உன்னை எப்படி ஏமாற்றுவது என்பதற்கு அவர் வேறு யோசனைகளைக் கூறுவார் அச்சையாவும் பாட்டியும் இந்த ஜன்மத்தில் உன்னை ஆளவிடப் போவதில்லை" என்று அவர்கள் விஜயரங்கனிடம் இடைவிடாமல் உருவேற்றிக் கொண்டிருந்தார்கள்.

இளவரசன் விஜயரங்கள் அவர்களுக்குச் செவி சாய்த்தான். அவர்கள் கூறுவதெல்லாம் சரியாயிருக்கும் என்றே அவனுக்குத் தோன்றியது. பாட்டி தன்னைப் பிரியமாக அரவணைத்து ஆளாக்கி வளர்த்ததெல்லாம் அவனுக்கு மறந்துவிட்டது. ஆசை பாசத்தை மறைத்துவிட்டது. பாட்டி மங்கம்மாள்தான் தன்னுடைய முதல் எதிரி என்று எப்படியோ அவனுடைய மனத்தில் ஒரு தப்பபிப்ராயம் ஏற்பட்டுவிட்டது. அவனைச் சுற்றியிருந்தவர்களில் ஒருவர் கூட அந்தத் தப்பபிப்ராயத்தை மாற்ற முற்படவில்லை. மாறாக அதற்கு உரமேற்றி அதை மேலும் மேலும் அவன் உள்ளத்தில் வளர்க்கவே முயற்சி செய்தார்கள்.

இராயசம் அச்சையாவுக்கும் தன் பாட்டிக்கும் தகாத முறையில் உறவு இருப்பதாகத் தன்னிடம் கோள்மூட்டியவர்களின் கூற்றை அவன் நம்பினான். 'கெடுமதி கண்ணுக்குத் தோற்றாது' என்ற பழமொழி விஜயரங்கனின் விஷயத்தில் உண்மையாயிருந்தது. கலகக்காரர்களின் போதனையே அவன் மனத்தினுள்ளே உருவேறிற்று. தான் அரசாட்சியை அடையாமல் இருக்கப் பாட்டி சதி செய்கிறாள் என்றே நம்பினான் அவன்.

போதாக்குறைக்கு அவனைக் கெடுத்த வந்தவர்கள் அவன். மனத்தில் பதியும்படி ஒன்றைச் சுட்டிக் காட்டத் தவறவில்லை. அவர்கள் கட்டிக் காட்டியது அப்போது பொருத்தமாக இருந்தது. உடனே நம்பி ஏற்கும்படியாகவும் கூட இருந்தது.