பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

ராணி மங்கம்மாள்

காகவும் ஒரு சீரான குரலில் பாடிக்கொண்டிருந்த வழிநடைப் பாடல்கள் நகரம் நெருங்குவதையறிந்து ஒலி மங்கிப் படிப்படியாக நின்றன. உறையூரையும் கடந்தாயிற்று.

பல்லக்கினுள் ராணி மங்கம்மாள் திருவரங்கமும் மலைக்கோட்டையும் இருந்த திசைகளை நோக்கிக் கைகூப்பினாள். ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனும் அந்தத் திசைகளை நோக்கித் தொழுதான். மங்கம்மாள் கூறினாள்:

“மதுரையில் மீனாட்சி சுந்தரேசரும், கள்ளழகப் பெருமாளும் நம்மைக் காப்பாற்றி விட்டார்கள். இங்கே ரங்கநாதரும் மலைக்கோட்டைப் பெருமானும் காக்க வேண்டும்.”

“பாதுஷாவின் ஆட்கள் மதுரையோடு திரும்பிப் போய் விடமாட்டார்கள். இங்கேயும் வந்து தொல்லை கொடுப்பார்கள் என்றே தோன்றுகிறது அம்மா!”

“மகனே! உத்தமமான வீரர்கள் நியாயமான முறையில் தன் எதிரியை மதித்து அவனை வெல்லவேண்டும் என்று மட்டுமே நினைப்பார்கள். மத்திமமான வீரர்கள் எதிரியை அழித்து அவன் உடைமைகள் பொருள்கள் பெண்டு பிள்ளைகளைச் சூறையாட வேண்டும் என்று நினைப்பார்கள். மிகவும் மூன்றாந்தரமானவர்கள் எதிரியை வெல்வதோடு அவனையும் அவனைச் சேர்ந்தவர்களையும் அவமானப்படுத்த வேண்டும் என்றும் நினைப்பார்கள். டில்லி பாதுஷ ஔரங்கசீப்பின் ஆட்கள் மூன்றாவது வகையைச் சேர்ந்தவர்கள் என்று தோன்றுகிறது.”

“இருக்கட்டும் அம்மா! மூன்றாந்தரமான அவர்களுக்கு நாம் முதல் தரமான பாடத்தைக் கற்பித்து அனுப்பலாம்.”

திரிசிரபுரம் கோட்டையில் புகுந்த பல்லக்கு அரண்மணை முகப்பில் இறக்கப்பட்டது.

உயரமும் அதற்கேற்ற உடலழகும் நிறைந்த பேரழகி ஒருத்தி இளவரசன் ரங்ககிருஷ்ண முத்துவீரப்பனுக்கு ஆரத்தி சுற்றிக் கொட்டி வரவேற்றாள். ராணி மங்கம்மாள் ஆரத்திக்குக் காத்து நிற்கவில்லை.