நா. பார்த்தசாரதி
201
"உன் நன்மைக்காகத்தான் அதைச் செய்கிறேன். உனக்குப் பக்குவம் வந்ததும் நீயே ஆளலாம். அந்த நல்ல நாளை எதிர்ப் பார்த்துத்தான் நானும் காத்திருக்கிறேன். உன்னிடம் ஆட்சியை ஒப்படைப்பதைவிட மகிழ்ச்சியான சம்பவம் என் வாழ்வில் வேறொன்றும் வரப்போவதில்லை அப்பா!"
"வீணாக நாடகமாடிப் பயனில்லை! இப்படிச் சொல்லிச் சொல்லியே எனக்குக் குழிபறிக்க வேண்டாம் பாட்டி!"
"உன் மனத்தை யாரோ கெடுத்திருக்கிறார்கள். அதனால்தான் நீ இப்படியெல்லாம் உளறுகிறாய்."
"உளறுவது யார்? நானா? நீங்களா?"
"உன் மேல் பிரியமில்லாமலா நீ மூன்று மாதத்துப் பாலகனாக இருக்கும்போதே உனக்கு முடிசூட்டினேன்."
"நல்லதற்காகவும், பிரியத்துக்காகவுமா அப்படிச் செய்தீர்கள்? என்னை ஏமாற்றிவிட்டு நீங்களும் தளவாய் அச்சையாவும் உல்லாச வாழ்க்கை வாழலாமென்று..." அவன் முடிக்கவில்லை. அதற்குள் அவள் குறுக்கிட்டாள்.
"விஜயரங்கா. வாயை மூடு..." அந்த மாளிகையின் நான்கு சுவர்களிலும் எதிரொலிக்கும்படி கூப்பாடு போட்டாள் ராணி மங்கம்மாள். பேரன் வாயிலிருந்து வெளிப்பட்ட சொற்களைக் கேட்டு தீயை மிதித்தவள்போல் ஆனாள் அவள்.
"இந்த அதிகாரமும் அடக்குமுறையும் இனிமேல் பலிக்காது பாட்டி நீங்களாக அடங்காவிட்டால் நானே உங்களையும் அடக்க வேண்டி வரும்..."
இதைக் கேட்டு ஆத்திரத்தை அடக்க முடியாமல் சீறி எழுந்திருந்தாள் ராணி மங்கம்மாள். அவள் முகம் சிவந்து கண்களில் அனல் பறந்தது ஒரு விஷமக்காரக் குழந்தையை இரண்டு குட்டுக் குட்டினால்தான் அடங்கும் என்ற எரிச்சலுடன் அவள் அவனை எட்டிப் பிடிக்க முயன்றபோது அவன் விருட்டென்று அங்கிருந்து வெளியேறிச் சென்று விட்டான்.