பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

ராணி மங்கம்மாள்

காவற்காரர்களை அழைத்து அவனைச் சிறைபடுத்திக் கொண்டுவந்து தன் முன் நிறுத்தித் தண்டித்திருக்க அவளால் முடியும். அந்த அளவுக்குப் பேரன் அவளை அவமானப்படுத்தியிருந்தான் என்றாலும் நிதானமாக யோசித்து அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். அவனை மற்றவர்கள் முன்னிலையில் பதிலுக்கு அவமானப்படுத்தவும் தண்டிக்கவும் அவள் தயங்கினாள். திருந்தி விடுவான் அல்லது தானே முயன்று திருத்தி விடலாம் என்று அவள் இன்னமும் நம்பினாள்.

ஆத்திரத்தில் பேரன் பேசிவிட்டுப் போயிருந்த ஒவ்வொரு சொல்லும் அவள் செவிகளில் நெருப்புக் கங்குகளாகச் சுழன்று கொண்டிருந்தன.

இவ்வளவு கடுமையான வார்த்தைகளை, பெற்ற தந்தையோ, தாயோ காலஞ்சென்ற ஆருயிர்க் கணவரோ கூட அவளிடம் பேசியதில்லை. பெற்றோரிடம் செல்லமாக வளர்ந்து கணவனிடம் மதிப்போடு வாழ்ந்து நாட்டு மக்களிடம் செல்வாக்கோடு வளர்ந்து பிரியமாக எடுத்து வளர்த்த சின்னஞ்சிறு பேரனிடம் இப்படி அவமானப்பட நேர்ந்ததே என்ற நினைப்பு ராணி மங்கம்மாளின் மனத்தை வலி உண்டாகும்படி இப்போது மிகவும் அழுத்தி உறுத்தியது.


27. விஜயரங்கன் தப்பி விட்டான்

ராணி மங்கம்மாளின் மனம் நிம்மதியிழந்து தவித்தது. பேரன் விஜயரங்க சொக்கநாதன் பேசிவிட்டுச் சென்ற சொற்களை அவளால் மறக்கவே முடியவில்லை.

பேரன் வலுவில் வந்து தன்னிடம் ஏறுமாறாகப் பேசி இப்படியெல்லாம் வற்புறுத்தியிராவிட்டால், அவளே ஒரு