பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

203

வேளை அவனைக் கூப்பிட்டுச் சில நாட்களில் ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்கவேண்டும் என்றுகூட எண்ணியிருக்கலாம். ஆனால் அவனே வற்புறுத்தி நிர்ப்பந்தப் படுத்தியதால் அவளது சந்தேகம் அதிகமாயிற்று. அதில் ஏதோ பிறர் தூண்டுதல் அல்லது சதியிருக்கவேண்டும் என்று அவள் சந்தேகப்பட்டாள்; கலங்கினாள்.

அரச பதவியை அடைய அவன் பறந்ததும் அவசரப் பட்டதும் சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றியது. இவ்வளவு நாட்களாகத் தான் கட்டிக் காத்த பொறுப்புகளை அவன் சீரழிந்து விடுவானோ என்று அஞ்சினாள் அவள்.

'அநுபவமோ, பக்குவமோ இல்லாமல் அவன் வயதுக்கு மீறி ஆசைப்படுகிறான்' என்பது அவளுக்குப் புரிந்தது. அதைப்பற்றிக் கலந்து ஆலோசிக்க வேண்டுமென்று கருதி உடனே தளவாய் அச்சையாவைக் கூப்பிட்டனுப்பினாள் அவள்.

அச்சையா வந்தார். எல்லா விவரங்களையும் ராணிமங்கம்மாள் அவரிடம் கூறினாள். அவர் மிகவும் சிந்தனை வயப்பட்டவராகச் சிறிதுநேரம் மெளனமாய் ஏதும் கூறாமல் இருந்தார். இந்த அதிர்ச்சி நிறைந்த செய்தியை அவரே எதிர்பார்த்திருக்க மாட்டார் என்று தோன்றியது. பின்பு நிதானமாகக் கூறினார்:

"இப்படி ஒன்று நடந்தது என்பதை யாரிடமும் கூற வேண்டாம் இது மிகவும் இரகசியமாகவே இருக்கட்டும். 'ராணி மங்கம்மாளுக்கும் அவள் பேரனுக்கும் ஆகவில்லை, விரோதம் மூண்டு விட்டது' என்ற செய்தி அவ்வளவு நல்ல விளைவுகளைத் தராது. உங்கள் எதிரிகளை மனம் மகிழச் செய்யும். அதனால் இப்படி ஒன்று நடந்தது என்பதையே மறந்து விட்டுப் பேசாமல் இருப்பதுதான் உத்தமம்."

"எரியும் நெருப்பை பஞ்சால் மூடிவிட்டு அப்புறம் பேசாமல் இரு என்பது போலிருக்கிறது. நீங்கள் சொல்வது."

"விஜயன், தானே ஓய்ந்து போய் விடுவான் என்று எனக்குத் தோன்றுகிறது."