பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

211

நண்பர்களையும் தன்னோடு ஒத்துழைத்த கலகக்காரர்களையும் சந்தித்துப் பேசினான். ராணிமங்கம்மாளின் ஆட்சியை எப்படி ஒழிப்பது என்று திட்டமிடலானான். பாட்டியைத் தன் விரோதி என்றே தீர்மானித்திருந்தான் அவன். தன்னைப் பற்றி பாட்டிக்கு நல்லெண்ணம் எதுவும் இருக்க முடியாது என்றே அவன் முடிவு செய்துவிட்டான். அவனும் அவனுக்கு வேண்டியவர்களும் சதியாலோசனைகளைத் தொடர்ந்தார்கள்.

ராணி மங்கம்மாள் விஜயனைத் தேடி அனுப்பிய காவலர்களால் அவன் ஒளிந்திருந்த மறைவான இடத்தைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பேரன் செய்வது விளையாட்டுப் பிடிவாதம் இல்லை. வினைதான் என்பது அவள் மனத்தில் இப்போது மீண்டும் உறுதிப்பட்டது. நாள் நீடிக்க நீடிக்க அவள் கவலை அதிகமாகியது. மேற்கொண்டு என்ன நடக்கும் என்பதை அவளாலேயே அநுமானிக்க முடியாமல் இருந்தது.

அதேசமயம் மறைந்து சதியாலோசனைகளில் ஈடுபட்டிருந்த விஜயரங்கனின் நிலைமையோ நாளுக்கு நாள் உறுதிப் பட்டுவந்தது. தன் ஆட்கள் சிலர் மூலமாக அரண்மனைப் படைத்தலைவர்கள் சிலரையும் பாதுகாப்புப் பொறுப்புகளில் இருந்த சிலரையும் கூடத் தனக்கு உதவுகிறபடி வளைத்திருந்தான் அவன்.

"எப்படியும் பாட்டிக்குப் பின் நான்தான் ஆளப்போகிறேன்! இப்போது உங்களில் யார் யார் என்னை எதிர்க்கிறீர்களோ அவர்களை நான் அரசனாகியதும் ஒழித்து விட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன் என்பதை இப்படி இன்று நான் சொல்லித்தானா நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்? ஜாக்கிரதை ஒழுங்காக இப்போதே என்னோடு ஒத்துழைத்து விடுங்கள் இல்லாவிட்டால் பின்னால் சிரமப்படுவீர்கள்"-

படைத்தலைவர்கள் பலரிடம் இப்பேச்சு நன்றாக வேலை செய்தது. பலர் அப்போதே விஜயரங்கனோடு ஒத்துழைக்க முன்வந்துவிட்டார்கள். அநேகமாக அரண்மனைப் பாதுகாப்பு