பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212

ராணி மங்கம்மாள்

ஏற்பாடு முழுவதுமே மெல்ல மெல்ல இரகசியமாக விஜயரங்கனின் பிடியில் வந்துவிட்டது. எல்லாமே தனக்குச் சாதகமாக இருந்தும் விஜயரங்கன் சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான். ராணி மங்கம்மாளுக்கும் தளவாய் அச்சையாவுக்கும் தெரியாமலே இரகசியமாக அரண்மனையும் படைத்தலைவர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் விஜயரங்கனின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டிருந்தன. மேற்பார்வையில் மட்டும் நாடு ராணிமங்கம்மாளே எல்லாவற்றையும் ஆண்டு வருவது போலிருந்தது. உள்ளேயே சூழ்ச்சிகளும் சதிகளும் நிறைவேறி இருந்தன. முடிவில் ஒரு நாள் தான் மறைந்து தங்கியிருந்த இடத்திலேயே தன் சதிக்கு உடந்தையாக இருந்த நண்பர்கள் படைத்தலைவர்கள் கூடிய கூட்டத்தில் அவர்கள் முன்னிலையில் நாயக்க சாம்ராஜ்யத்தின் அரசனாக விஜயரங்கன் தனக்குத்தானே முடி சூட்டிக்கொண்டான்.

சதிக்கு ஒத்துழைத்த படைத்தலைவர்களையும், நண்பர்களையும் நம்ப வைப்பதற்கு இந்த மகுடாபிஷேக நாடகத்தை அவன் ஆடியே தீர வேண்டியிருந்தது. இரவில் பரம இரகசியமாக இது நடந்தது.

விஜயரங்கன் காணாமல் போய்த் தலைமறைவாகிச் சில நாட்கள் கழித்து ராணி மங்கம்மாள் அந்தப்புரத்தில் தன் படுக்கை அறையில் அயர்ந்து உறங்கிவிட்ட ஓர் அதிகாலையில் ஏதோ கூப்பாடுகளும் முழக்கங்களும் கேட்டுத் திடுக்கிட்டுக் கண் விழித்தாள்.

"மாமன்னர் விஜயரங்க சொக்கநாதர் வாழ்க மதுரைச் சீமையின் மகராசர் விஜயரங்கர் வாழ்க!" -என்ற வாழ்த்தொலிகளால் அரண்மனை கலகலத்துக் கொண்டிருந்தது.

என்ன நடந்துகொண்டிருக்கிறது. தான் எங்கே இருக்கிறோம். என்று சுதாரித்துக்கொள்ளவே சில விநாடிகள் ஆகின. படுக்கை அறையிலிருந்து வெளியே வர வாயிலருகே சென்றாள் அவள்.

அறைக்கதவு வெளிப்புறமாக அடைத்துப் பூட்டப்பட்டிருந்தது. கதவு வரை சென்றுவிட்டு ஏமாற்றத்தோடும் திகைப்போடும் தலை