பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

213

குனிந்தபடி மீண்டும் உள்ளே திரும்பிய ராணி மங்கம்மாள் அறை வாசலில் ஏளனச் சிரிப்பொலி கேட்டு மறுபடிதிரும்பிப் பார்த்தாள்.

விஜயரங்கன்தான் நின்றுகொண்டிருந்தான். அவன் தலையில் முடிசூட்டப்பட்டிருந்தது.

"விஜயரங்கா இதெல்லாம் என்னடா கோலம்? யார் அறைக் கதவை வெளிப்புறமாகத் தாழிட்டுப் பூட்டியிருப்பது?"

"ஒன்றுமில்லை. சில நாட்களுக்கு முன் நீங்கள் எனக்குச் செய்த அதே உபசாரத்தை உங்களுக்கு இப்போது நான் திருப்பிச் செய்திருக்கிறேன். புரியும்படியாகச் சொல்வதானால் இந்த அறைக்குள் நீங்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கிறீர்கள். உங்களுக்கு இந்த வயதான காலத்தில் அதிகச் சிரமம் வைக்கக்கூடாது என்பதற்காகச் சிறைச்சாலை இருக்கும் இடத்துக்கு உங்களை அனுப்பாமல் நீங்கள் இருக்கும் இடத்தையே சிறைச்சாலையாக மாற்றிவிட்டேன், பாட்டி!"

"துரோகி குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பே உன்னைப் பச்சிளம் பாலனாக எடுத்துப் பாலூட்டித் தாலாட்டிச் சீராட்டி வளர்த்ததற்கு எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்."

"இதே முறையில் நான் இருந்த இடத்திலேயே என்னை நீங்கள் சிறைப்படுத்தினீர்களே, அது துரோகமில்லாமல் என்னவாம்?"

"வார்த்தையை அளந்து பேசு உன் நாக்கு அழுகிவிடும்."

"இனி உங்கள் சாபங்கள்கூடப் பலிக்கவழி இல்லை. அதிகாரம் இப்போது உங்களிடம் இல்லை. படைத்தலைவர்கள், படைகள், கோட்டை, கொத்தளம், ஆட்சி அத்தனையும் என்னிடம் இருக்கிறது என்பதை நீங்கள் ஞாபகம் வைத்துக்கொண்டு பேசினால் நன்றாயிருக்கும் பாட்டி"

"அற்பனுக்கு வாழ்வு வந்தால் இப்படித்தானடா சொந்தப் பாட்டியிடம் கூடப் பேசமுடியும்."