பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

215

தன்மேல் விசுவாசமுள்ள யாராவது பேரனுக்குத் தெரியாமல் தன்னை விடுவிக்க வருவார்கள் என்று நம்பினாள் அவள். அரண்மனையிலும், சுற்றுப்புறங்களிலும் உள்ள யாரும் சுயமாக இயங்கமுடியாதபடி விஜயரங்கனின் கட்டுப் பாட்டுக்குள் அடங்கிவிட்டதால் அவள் எண்ணியபடி எதுவும் நடக்கவில்லை. வெளியே என்ன நடக்கிறது என்று அவளுக்கு யாரும் வந்து சொல்லக்கூட முடியவில்லை. இந்தத் தனிமையும் நிராதரவுமே பேரனின் துரோகத்தை விட அதிகமாக அவளைக் கொடுமைப்படுத்தின. அவள் மனம் ஒடுங்கி உணர்வுகள் செத்து நடைப் பிணமாகச் சிறையில் இருந்தாள். அவள் மான உணர்வு அவளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சித்திரவதை செய்தது. இப்படியே இன்னும் சில நாட்கள் தனிமையில் அடைபட்டுக் கிடந்தால் சித்தப்பிரமை ஏற்பட்டுப் புத்தி சுவாதீனமே போய்விடும் போலிருந்தது.

"வாழ்க்கையில் இவ்வளவு தான தர்மங்களைச் செய்தும் எனக்கு இந்தக் கதியா? கடவுளே! நான் என்ன பாவம் செய்தேன்? என்னை ஏன் இத்தனை பயங்கரமான சோதனைகளுக்கு ஆளாக்குகிறாய்? நான் யாருக்கும் எந்தக்கெடுதலும் நினைத்ததில்லையே என் பேரனுக்குப் பக்குவமும் வயதும் வந்ததும் ஆட்சியை அவனிடம் ஒப்படைக்கலாம் என்றுதானே நாட்களை எண்ணிக் கொண்டிருந்தேன்? எனக்கா இந்தத் தண்டனை?" என்று எண்ணி எண்ணி மனம் நைந்தாள் ராணி மங்கம்மாள்.

அவள் அந்தச் சிறைச்சாலையில் கவனிப்பாரற்றுக் கிடந்தாள். வேளா வேளைக்கு அன்ன ஆகாரமும் பருக நீரும் கூடத் தருவாரில்லை. இதுவரை தன் பகையரசர்களிடம் கூடப் படாத அவமானத்தைச் சொந்தப் பேரப்பிள்ளையாண்டானிடம் படுகிறோமே என்ற எண்ணம் அவளை அணு அணுவாகச் சிதைத்து நலிய வைத்தது. பேரன் இத்தனை பெரிய கிராதகனாக இந்த வயதிலேயே உருவெடுத்து இப்படிக் கெடுதல்கள் செய்வான் என்பது அவள் கனவிலும் எதிர்பாராத அதிர்ச்சியாயிருந்தது. இன்னும்